ஆரோக்கியம்புதியவை

கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

 

பொதுவாகவே வயது பேதமில்லாமல் அனைவரையும் உடற்பயிற்சி செய்ய வலியுறுத்துகிறார்கள். மருத்துவர்கள் மட்டும் அல்லாமல் உடல் நலனில் அக்கறை கொண்டிருக்கும் பலரும் கூறுவதும் இதுதான்.

வீட்டில் செய்யும் வேலைகளே தலைக்கு மேலே இருக்கிறது. இதில் தனியாக உடல்பயிற்சி வேறா என்று புலம்பும் இல்லத்தரசிகளாக இருக்கட்டும். காலையில் எழுந்ததில் இருந்து ஆஃபிஸ்க்கு போய் வருவதற்குள் முழி பிதுங்கிவிடுகிறது இதில் எங்கிருந்து உடற்பயிற்சி என்று சலித்துக்கொள்ளும் ஆண்களாக இருக்கட்டும், ஏற்கனவே இருக்கும் உடல்சோர்வு போதாமல் கருவுற்ற காலம் இன்னும் சோர்வை அதிகரித்திருக்கிறது இந்நிலையில் உடற்பயிற்சி வேறா என்றா கேட்கும் கர்ப்பிணி பெண்ணாக இருக்கட்டும் அனைவரது ஆரோக்கியமும் உடற்பயிற்சியில் தான் அடங்கியிருக்கிறது.பிரசவக் காலத்தை எதிர்நோக்கும் அனைத்து பெண்களும் சற்று பின்னோக்கிய நமது மூதாதையர் காலத்தை எடுத்துக் கொண்டால் வியப்பாக இருக்கும். கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீட்டில் கூடுதலாக கவனிப்பு இருந்தாலும் வேலையைப் பொறுத்தவரை அவர்களுக்கான பொறுப்புகளை அதிகரித்துவிடுவார்கள்.

இப்போது போன்று நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் காலம் அப்போது இல்லை என்பதால் அவர்கள் பிரத்யேகமாக எந்தவிதமான உடற்பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அன்றாட வீட்டு வேலைகளை விடாமல் செய்துவந்தார்கள். வீட்டை பெருக்கி துடைப்பதும், துணியை அடித்து துவைப்பதும், தண்ணீர் குடம் சுமப்பதும், வாசலை கூட்டி சுத்தம் செய்வதும் அவர்களுக்கு உடற்பயிற்சியோடு கூடிய வேலையாகிவிட்டது.எப்போதும் இயங்கிகொண்டிருக்கும் அவர்களால் ஆரோக்கியமாக இருந்து ஆரோக்கியமான குழந்தையை அலட்டல் இன்றி பெற்றெடுக்கவும் முடிந்தது.

பெரும்பாலான பெண்கள் பணிபுரிந்துவருகிறார்கள். அதனால் வீட்டில் இருக்கும் வேலையைப் பார்த்து அலுவலகத்தில் வேலை பார்த்தாலே உடல் உழைப்பு தான் உடலுக்கு ஏற்றபயிற்சிதான் என்று நினைக்கிறார்கள் ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுத்து மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை எல்லாம் உடல் உழைப்பில் சேராது. மாறாக மன உளைச்சலையே அதிகரிக்கும்.கருவுற்ற ஆரம்ப காலத்தில் உடல் சோர்வு மனசோர்வு எல்லாம் இணைந்து இறுதியில் படுக்கையில் சுருட்டி விழவே செய்யும். இந்த காலத்தில் உண்பதும், உறங்குவதும் கூட குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தான் என்னும் போது உடற் பயிற்சி சாத்தியமா என்று கேட்கலாம். ஆனால் பேறுகாலம் முழுவதும் உடலை வறுத்தும் பயிற்சிகள் தேவையில்லை. வாக்கிங், யோகா, உடலில் சற்று தெம்பு இருக்குமானால் நீச்சல் போன்ற ஆரம்ப பயிற்சிகளில் ஈடுபடலாம்.

கருவுற்ற முதல் ஐந்து மாத காலங்களுக்கு மசக்கை வாந்தி, உடல் சோர்வு, பசியின்மை ஒருவித எரிச்சல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகான கால கட்டத்தில் அதாவது ஐந்து மாதங்களுக்கு பிறகு ஆறாவது மாதத்தில் சிறிய பயிற்சிகளை மீண்டும் தொடங்கலாம். பயிற்சியுடன் மூசுச் பயிற்சி போன்றவையும் சிறந்தது.சுயமாக எந்த பயிற்சியையும் மேற்கொள்ளலாமல் அனுபவமிக்க உடற்பயிற்சியாளரின் உதவியுடன் பிரசவகாலத்தில் பயன்படும் உள் உறுப்புகள் சீராக செயல்படும் விதமாக அவை பலமடையும் விதமான பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. இதனால் பிரசவக்காலத்தில் தசைகள் எளிதாக உதவும். குறிப்பாக தலைப்பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக இது போன்ற பயிற்சியை செய்ய வேண்டும்.

பயிற்சி என்றதும் ஜிம்முக்கு போக வேண்டும். ஓட வேண்டும் ட்ரெட் மில்லில் நடக்க வேண்டும். குதிக்க வேண்டும் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். சுருக்கமாக சொன்னால் நாம் உடலை வளைத்து செய்யும் வீட்டு வேலைகளை செய்யாமல் போனதன் விளைவு தான் இன்று உடலுக்கு தனியாக பயிற்சி கொடுக்க வேண்டியதாக உள்ளது. எனினும் எளிமையான பயிற்சிகள் போதுமானது.

மனதுக்கு அமைதி தரும் யோகா உடலுக்கு வலுவயும் தரும் என்பதால் யோகா பயிற்சி நல்லது என்கிறார்கள். மேலும் உடலை களைப்படைய செய்யாத உடல் பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.உடற்பயிற்சியில் முக்கியமானதாக நடைபயிற்சியை சொல்வார்கள்.இது எளிய பயிற்சியாக அதிகமாக பயன் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் சோர்வு காலங்களிலும் நடைபயிற்சி செய்யும் போது சோர்வையும் விரட்டி அடிக்கும். மேலும் பிரசவகாலம் முழுமையும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

நடைபயிற்சியை இப்போது தான் செய்ய வேண்டும் என்றில்லை. அதிகாலையில் செய்யும் போது அதற்கான பலன் அதிகரிக்கும் அவ்வளவே. அதனால் எப்போது இயலுமோ அப்போது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இரவு நேரங்களில் உணவு உண்டபிறகும் நடைபயிற்சி செய்யலாம். எவ்வளவு நேரம் நடக்கமுடியுமோ அவ்வளவு தூரம்நடக்கலாம்.

குறைந்தது அரைமணி நேரமாவது நடைபழகுவது முக்கியம். எந்த காரணம் கொண்டு வெறும் வயிற்றில் நடக்க வேண்டாம். பேறுகாலம் நெருங்கும் வரை இதைக் கடைப்பிடிக்கலாம். இறுதி மாதத்தில் நடக்கும் போது மூச்சு வாங்க தொடங்கும் எனினும் நடைபயிற்சியை விடாமல் பொறுமையாக நடக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker