ஆரோக்கியம்புதியவை

பெண்கள் கர்ப்பம் முதல் பிரசவம் வரை சந்திக்கும் இன்னல்கள்

உயிரோடு உயிர் சேர்த்து வளர்த்து, பெற்றெடுக்கும் வலியை மட்டும் அனுபவிப்பதில்லை கர்ப்பிணிகள். கர்ப்பம் உறுதியான நாள் முதல் பிரசவம் வரை உடலளவில் அவர்கள் சந்திக்கிற திடீர் மாற்றங்களும், இன்னல்களும் சொல்லி மாளாதவை. அவற்றில் எது சாதாரணமானது, எது பிரச்னைக்குரியது என்கிற தெளிவின்றி குழம்புகிறவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளை பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் ஆறு மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட முதுகுவலி வரலாம். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன. கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பதால் அவர்களது ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நிற்பதும் இந்த நிலையை மோசமாக்குகின்றன. எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் தவிருங்கள்.இன்னும் சில தவிர்ப்பு முறைகள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருந்தாலும் அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி
நிற்பதே சரியான நிலை. முதுகுக்கு ஆதாரம் கொடுத்து உட்காருங்கள். தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
எடை அதிகமான பொருட்களை உங்கள் உடலுக்கு அருகில் இருக்குமாறு பிடித்துத்தூக்குங்கள்.

முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள். முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும். கர்ப்பக் காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு, ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது சிறிது நேரம் நடப்பது போன்றவற்றை ஆறு மாதங்கள் வரை பின்பற்றுங்கள். முதுகுவலி தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுங்கள். பிசியோதெரபியும் சில வகையான உடற்பயிற்சிகளும் உங்களுக்கு உதவலாம்.கர்ப்ப காலத்தில் அடிக்கடி மூச்சு நின்று போவதுபோல தோன்றுவது இயல்பு. கருப்பையிலுள்ள குழந்தை கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கி, பனிக்குடம் வழியாக அதை ரத்த ஓட்டத்துக்குள் கடத்துகிறது. அவற்றை வெளியேற்றுவதற்காக உங்கள் உடல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், கர்ப்ப காலத்தின் கடைசி நாட்களில், கருப்பையானது மார்புக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவிலுள்ளதும், நுரையீரல் சுருங்கி விரியக் காரணமானதுமான பகுதியை மேல் நோக்கித் தள்ளுவதால், நுரையீரல் விரிவடைவதற்குப் போதுமான இடமில்லாமல் போய்விடும். இதனால் குறிப்பிட்ட அளவு காற்றை சுவாசிக்க இயலாத நிலை ஏற்படுவதாலும் சுவாசத் தடை ஏற்படுகிறது.இருமல், மார்பு வலி அல்லது தொடர்ச்சியான களைப்புக்கு அடுத்து சுவாசத்தடை ஏற்படுமானால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஆஸ்துமா இருந்தால், அது நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கர்ப்ப காலம் முழுவதும் மிகவும் பாதுகாப்பாக இன்ஹேலர்களைப் பயன்படுத்தலாம். அதேநேரம், மிக மோசமான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டால், அது குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை குறைத்து விடுவதோடு, ஆபத்தாகவும் முடியும்.

தலைவலி

கர்ப்ப காலத்தில் இது சகஜம்தான். வெப்பமான, காற்றோட்டம் இல்லாத சுற்றுச் சூழல்களைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு அவசியம். அதிகளவில் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தலைவலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவர் ஆலோசனையுடன் சாதாரண பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாம்.ஆனால் ஆஸ்பிரினை சாப்பிடக் கூடாது. பாராசிட்டமால் பாதுகாப்பானது என்பதோடு குழந்தைக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. தலைவலியானது அடிக்கடி வந்தாலோ, தீவிரமானாலோ மருத்துவரைப் பார்க்கவும். கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் தலைவலி ஏற்படுவது மிகை ரத்த அழுத்தத்தின் அறிகுறியாகவோ அல்லது வேறு பிற சிக்கலாகவோ இருக்கக் கூடும். அலட்சியம் வேண்டாம்.

ஈறுகளில் ரத்தக் கசிவு

கர்ப்ப காலத்தில் ஈறுகள் மென்மையாக மாறும். கடினமான உணவுப் பொருட்களைக் கடிப்பது, பற்களை அழுத்தித் தேய்ப்பது போன்ற இரண்டுமே பற்களைப் பாதித்து நோய்த்தொற்றையும் உண்டாக்கும். கர்ப்பக் காலத்தில், பற்களைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் வேண்டும். ஒரு நாளைக்கு இருவேளை பல் துலக்குங்கள். மிருதுவான பிரஷ் பயன்படுத்துங்கள்.

அரிப்பு

கருப்பையிலுள்ள குழந்தை வளர வளர உங்கள் வயிற்றுப் பகுதியிலுள்ள சருமம் இறுகத் தொடங்குகிறது. இதனால் கோடுகள் தோன்றி அப்பகுதியில் அரிப்பு இருக்கும். உடல் முழுவதும் அரிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம். மென்மையான, தளர்த்தியான ஆடைகளை அணிவது பலன்தரும்.

இருவேளை குளிக்கலாம். அரிப்புள்ள இடத்தில் லோஷன் அல்லது டால்கம் பவுடர் தடவுவது இதமாக இருக்கும்.வெள்ளைப்படுதல் கர்ப்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் அதிகளவில் வெள்ளைப்படும். இதனால் புண்ணோ, நமைச்சலோ ஏற்டாதவரை பயப்படத் தேவையில்லை. புண், எரிச்சல் அல்லது நிறமாற்றம் மற்றும் நாற்றத்துடன் வெள்ளை பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker