அழகு..அழகு..

சன்ஸ்கிரீனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

‘‘பெண்களுக்கு அழகில் அவ்வப்போது ஏற்படும் எதிர்பார்ப்புகள் பற்றியும், பெண்களிடையே அதிகரிக்கும் அழகுப் பிரச் சினைகள் பற்றியும், எங்கள் அழகுக் கலை மையத்தின் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்வோம். அதில் தற்போது பெண்களிடையே சரும பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இப்போது புறஊதாகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதும், சீதோஷ்ண நிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு பெருகிக்கொண்டிருப்பதும், அதற்கான முக்கிய காரணங்கள் என்பது புரிந்தது.பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவேண்டும் என்றால், ‘சன்ஸ் கிரீன்’ கிரீமை பயன்படுத்தி பாதுகாப்பு தேடிக்கொள்ளவேண்டும். அது பற்றி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதல் கின்னஸ் சாதனையை மேற்கொண்டோம். அதில் என் முன்னிலையில் ஒரே நேரத்தில் 2441 பெண்கள் கலந்துகொண்டு சன்ஸ்கிரீன் கிரீமை தங்கள் கைகளில் தேய்த்து, இந்த சாதனையை உருவாக்கினோம். இதன் மூலம் 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் 1822 பேர் கலந்துகொண்ட பழைய சாதனையை முறியடித்துள்ளோம்’’ என்று முதல் கின்னஸ் சாதனையை பற்றி விளக்கினார், பிரபா ரெட்டி.

‘சன்ஸ்கிரீனை எப்படி பயன்படுத்தவேண்டும்? அதனை பயன்படுத்தாவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?’ என்று அவரிடம் கேட்டபோது..‘‘புறஊதாகதிர்களில் இருந்து உடலை பாதுகாக்காவிட்டால் சருமம் பொலிவிழக்கும். பல்வேறு விதமான ஒவ்வாமைகள் சருமத்தில் உருவாகும். மிக அரிதாக சரும புற்றுநோய்கூட வரலாம். அதனால் முடிந்த அளவு சருமத்தை நாம் பாதுகாக்கவேண்டும். ‘எஸ்.பி.எப்’ என்பது அதன் பாதுகாப்புத்தன்மையின் அளவீடாகும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் எஸ்.பி.எப் – 30 என்ற அளவீட்டுத் தரம் பொருத்தமானதாக இருக்கும். நமது உடலில் ஆடை மறைக்காத பகுதிகளான முகம், கைகளுக்கு இது அவசியம். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இதை பூசிக்கொண்டால் நமது சருமத்திற்கு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படும்’’ என்று விளக்கினார்.

அதே நாளில் இவர் படைத்த இரண்டாவது கின்னஸ் சாதனை `லாங்கெஸ்ட் ஸ்கின் கேர் லெசன்’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு சீனாவில் 1767 அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டு உருவாக்கிய முந்தைய சாதனையை இவரது தலைமையில் ஒருங்கிணைந்த 2338 பெண் அழகுக்கலை நிபுணர்கள் முறியடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு கின்னஸ் சாதனைகளையும் பிரபா ரெட்டி ‘வீகேர்’ நிறுவனத்தின் சார்பில் உருவாக்கியுள்ளார்.‘‘சரும பராமரிப்பு என்பது உலக அளவில் அடிக்கடி புதுமைகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் துறையாகும். நவீன கண்டுபிடிப்புகளும் அதில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவைகளை தென்னிந்தியாவில் உள்ள அழகுக் கலை நிபுணர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் இந்த சாதனையை உருவாக்க திட்டமிட்டோம். உச்சி முதல் பாதம் வரையுள்ள மொத்த சரும பாதுகாப்பிற்கும் பயனுள்ள விஷயமாக இதை நடத்தியிருக்கிறோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அழகுக்கலை நிபுணர்களை ஒரே அரங்கில் கூட்டுவதுதான் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆடி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் இல்லாததால், இத்தனை பேரையும் ஒரே இடத்தில் சேர்க்க முடிந்தது. இந்த கின்னஸ் சாதனைக்காக நான் அரை மணி நேரம் தொடர்ந்து பேசினாலே போதுமானதாக இருந்தது. ஆனால் நான் முக்கால் மணிநேரம் தொடர்ச்சியாக விளக்கமளித்தேன். இரண்டு கின்னஸ் சாதனைகளையும் உடனேயே அங்கீகரித்து சான்றிதழை வழங்கிவிட்டார்கள்’’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார், பிரபா ரெட்டி.செங்கல்பட்டு அருகில் உள்ள தச்சூர் என்ற கிராமத்தை சேர்ந்த இவர், ஆசிரியை பயிற்சி முடித்து 7 ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்திருக்கிறார். பின்பு கணவரின் ஒத்துழைப்போடு அழகுக்கலை துறைக்கு வந்து, வெளிநாடுகளுக்கு சென்று நவீன விஞ்ஞான முறையிலான பயிற்சிகளை பெற்றுள்ளார். பின்பு சென்னையில் அதற்கான மையத்தை தொடங்கி பயிற்சி கொடுத்து ஏராளமான பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்.

‘‘எனது பெற்றோர் லூர்துராஜ் – ராஜம். நான் பிறந்து வளர்ந்த தச்சூர் குக்கிராமத் தில் எனது மாமா ராஜ் ஓரிகண்டிதான் அங்கு முதல் பட்டதாரி. எங்கள் பூர்வீகம் ஆந்திரா. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் என்பதால், என்னை தொடர்ந்து படிக்கவைத்தார்கள். நான் எங்கள் கிராமத்தில் இருந்து தினமும் பஸ்சில் 30 கி.மீ. தூரம் பயணித்து, பள்ளிக்கு சென்று படித்தேன். நான் ஆசிரியையாக வேண்டும் என்று அம்மா விரும்பியதால், அதற்கான பயிற்சியையும் முடித்தேன். 20 வயது முதல் புதுச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றினேன்.சிறுவயதில் இருந்தே எனக்கு அழகுணர்ச்சி அதிகம். எனது மாமா மதன்கேப்ரியல் பிலிம் டெக்னாலஜி படித்துவிட்டு சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புத்துறையின் தலைவராக பணிபுரிந்தார். அவர்தான் எனக்கு நன்றாக உடைஅணிந்து அழகை பேணும் நேர்த்தியை கற்றுத்தந்தார். நான் 15 வயது வரை எனது தாத்தா பிரான்சிஸ் ஓரிகண்டியிடம் வளர்ந்தேன். நான் இன்று வெற்றிகரமான பெண்ணாக இருக்கவும், தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாக வலம்வரவும் தாத்தாவின் வளர்ப்புமுறைதான் காரணம். அவர் எப்போதும் என்னிடம், ‘நீ எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் சாதனைபடைக்கவேண்டும். சமூக அக்கறையோடு நிறைய பேருக்கு வேலைகொடுக்கவேண்டும்’ என்று சொல்வார்.

நான் எப்போதுமே எதற்குமே பயப்படுவதில்லை. ‘உன்னை அச்சுறுத்தும் விதத்தில் யார் நடந்துகொண்டாலும் தட்டிக்கேள். உனது பாதுகாப்பிற்கு தாக்கவும் தயங்காதே’ என்று, துணிச்சல்கொடுத் தும் என்னை வளர்த்தார். நானும் வம்பு செய்தவர்களை அடித்துவிட்டு, என் தாத்தாவிடம் போய் சொல்வேன். பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்தையும் அவர் எனக்கு கற்றுத்தந்தார். பிரச்சினைகள்தான் பெண்களிடம் இருக்கும் திறமைகளையும், ஆற்றல் களையும் வெளிக்கொண்டு வரும். பிரச்சினைகள்தான் என்னை வளர்த்தது, வளப்படுத்தியது. அதனால் பிரச்சினைகளுக்கு பயந்து பெண்கள் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது’’ என்று கூறும், பிரபா ரெட்டிக்கு 19 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. கணவர் ஆசிரியர் ஆரோக்கியசாமி. இந்த தம்பதியின் ஒரே மகள் பிரீத்தி மார்ட்டினா.‘‘பெண்கள் தாயான பின்பு அவர்களது குணாதிசயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். நான் தாயான பின்பு என் மகளால் எனக்குள் நிறைய மாற்றங்கள் உருவாகின. நான் ரொம்ப அமைதியான பெண்ணாக ஆகிவிட்டேன். நானும் என் மகளும் தோழிகள்போல் பழகுவோம். மகளை பெற்ற அம்மாக் களுக்கு நான் சொல்லும் விஷயம் என்னவென்றால், `உங்கள் மகளுக்கு நீங்கள் தோழியாகிவிடுங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் உருவாகும்’ என்பதுதான். எனது மகள் டாக்டருக்கு படித்து, அறுவைசிகிச்சை துறையில் மேற்படிப்பும் கற்றிருக்கிறார்’’ என்று கூறும் பிரபா ரெட்டி அழகுக் கலைத்துறையில் தனது 27 வயதில் காலடி எடுத்துவைத்திருக் கிறார். இந்த துறையில் இவரது சேவைகளை பாராட்டி அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று முனைவர் பட்டம் வழங்கி கவுரவித் துள்ளது.

‘‘எனது கணவரின் வழிகாட்டுதலோடு நான் அழகுக்கலைத் துறைக்கு வந்தேன். ஆனால் அப்போது இந்த துறை அவ்வளவு நவீனமாகவும், மேம்பட்டதாகவும் இல்லை. அதனால் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று நவீன அழகுக்கலை பயிற்சிகளை பெற்றேன். அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது. எனது திருமண சீராக பெற்றோர் வழங்கிய நகைகளை விற்று நான் அழகுக்கலை கல்வி பயின்றேன். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினேன்.அழகுக் கலையில் நான் கற்றவைகளில் ‘டிரைகாலஜி’ எனப்படும் முடிகளை பற்றிய விஞ்ஞானபூர்வமான கல்வி மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் அதை கற்றேன். நாம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும்போதே நமக்கு முடி வளரத் தொடங்கிவிடுகிறது. அது கெரட்டின் என்ற புரோட்டீனால் உருவானது. ஒவ்வொரு முடியும் மூன்று முதல் நான்கு வருடங்கள் வளர்ந்து, ஓய்ந்து, பின்பு உதிரும். அடுத்து அதே இடத்தில் மீண்டும் முடி வளரும். மயிர்க்கால்களின் ஆரோக்கியம்தான் முடியின் ஆரோக்கியம்.

மயிர்க்கால்களை பலப்படுத்த புரத சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். தரமான எண்ணெய்யையும், மூலிகைப் பொருட்களையும் கூந்தலுக்கு பயன்படுத்தவேண்டும். போதுமான அளவு தூக்கம், ஓய்வு, அமைதி நிறைந்த வாழ்க்கையும், மாசு இல்லா சுற்றுப்புற சூழலும் கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியம். தண்ணீரும் போதுமான அளவு பருகவேண்டும்.முடி உதிர்தலையும், மண்டை ஓட்டின் தன்மையையும் பார்த்து உடலில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நோய்களை கண்டு பிடித்துவிடலாம். அதனால் முடிஉதிர்தலை பெண்கள் சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்று முடி உதிர்கிறது என்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்கான பிரச்சினை உடலில் உருவாகியிருக்கும். ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, பி.சி.ஓ.டி. போன்ற ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகவும் முடிஉதிர்தல் இருக்கக் கூடும். அதனால் முடி அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும் தன்மைகொண்டது. ஆகவே அதனை விஞ்ஞானமுறையில் நன்றாக பராமரிக்கவேண்டும். கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் பெண்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற கின்னஸ் சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கிறோம். அழகு பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரும்..’’ என்கிறார் அழகுக்கலை நிபுணர், முனைவர் பிரபா ரெட்டி.

அழகு, பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கையை தரட்டும்!Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker