எடிட்டர் சாய்ஸ்

இளைஞர்கள் வாழ்வைப் பறிக்கும் வன்முறைகள்

இளைஞர்கள் தங்களின் தனித்தன்மையை காட்டிட ஆக்க வழி விடுத்து வன்முறை செயல்களை மேற்கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனையோ, சக மனிதரையோ, காயப்படுத்துவதும், அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னை பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என நம்புகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த உடன் வேலைக்கு செல்ல வேண்டிய இளைஞர்கள் சமூகம் வன்முறைச் செயல்களால் பெரிதும் பாதிப்பு அடைகிறது. மனித நேயம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு நேரத்திலும் புதிதாய் சந்திக்கும் மனிதனை ஒரு பொருட்டாக நினைப்பது கிடையாது. சுயநலம், சுயவருவாய், தனித்த பொழுதுபோக்கு, கேளிக்கை, உல்லாசம் இதற்கு தடையாக வரும் சக மனிதனையும், வன்முறைச் செயல்களால் தாக்கக்கூடிய கொடிய மனப்போக்கு வளர்ந்து கொண்டே வருகிறது.

1950 முதல் 1980 வரை ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை அரசு தொடங்கியது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இது வாழ்வில் அச்சமற்றும் நீண்ட நாட்களுக்கு பயன்தரக்கூடியதும் பயமற்ற பொருளாதார வரவுகளையும் கொடுத்தது. இதனால் இளைஞர்கள் ஒரு நிரந்தரமான வாழ்வியல் நிலைகளை உணர்ந்தார்கள்.

\

இன்று தனியார் மய கொள்கைகள் மெல்ல தலை எடுக்கத் தொடங்கிய பிறகு தான் பதுக்கல், ஊழல், கருப்புப்பணம் என்பது உருவாகத் தொடங்கியது.

தனியார் சந்தைகள் விவசாயிகள் உற்பத்தியைக் கூடத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாய் இடைத்தரகர்கள் பெருகினார்கள். உழைக்காமல் வருவாயை ஈட்டிடும் தனியார் முதலாளிகளின் கை ஓங்கியதால் இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை, வயதுக்கு ஏற்ற வாழ்க்கை கிடைக்காமல் போனது. இதன் காரணமாய் இளைஞர்கள் மனதில் குறுக்கு வழியில் ஆதாயம் பெறக்கூடிய எண்ணம் தோன்றியது. கடின உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் கைவிட்டுப் போனது. குறுக்கு வழியில் உயர்வதே வாழ்வில் புத்திசாலித்தனம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது.இளைஞர்கள் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்திட ஆக்க சக்தியினை பயன்படுத்துவதை விடுத்து வன்முறையை கையில் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். தன்னை ஒத்த இளைஞனை தாக்கி காயப்படுத்துவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதும் மற்றவர் தன்னைப் பார்த்து அச்சப்படுவதுமே உண்மையான ஹீரோயிசம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் இளைஞர் பலர் குற்றச் சம்பவங்களில் மாட்டிக் கொண்டு தங்கள் வாழ்க்கையே இழக்கிறார்கள். பல இளைஞர்களுக்கு தாங்கள் ஈடுபடும் வன்முறை செயல்களுக்கு கிடைக்கும் தண்டனை எவை, இதன் விளைவால் ஏற்படக்கூடிய குடும்ப மற்றும் சுற்றுப்புற உறவுகளின் பாதிப்பு எவை என்பதை அறியாமேலேயே குற்றச்செயல்களில் ஈடுபட்டும் மாட்டிக்கொள்கிறார்கள்.இன்றைய இளைஞர்களிடையே பரவும் வன்முறை கலாசாரம் அவர்களின் வாழ்வை பாதிக்கிறது. அறியாமையும் ஒவ்வொரு குற்றத்திற்கு என்ன விதமான தண்டனை என்பதனை அறியாத அலட்சியப்போக்கும் எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கை வறட்சி போன்றவையே பெரிதும் இன்றைய இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. எனவே இளைஞர்களை வன்முறையில் ஈடுபட வைப்பது அவர்களின் மனோநிலை மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளே ஆகும். இளைஞர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு போதுமான அளவுக்கு சட்டம் பற்றியும் குற்றங்களுக்கு கிடைக்கும் தண்டனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.. வெற்றியாளர்கள் தொடர் உழைப்பும் இடைவிடாத முயற்சியால் தான் உருவாகிறார்கள் என்பதை உணர்த்தும் கடமை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கடமையாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker