இந்துக்களின் வாழ்வை புரட்டி போட்ட திருமண சட்டம்…
மே 18-ந்தேதி இந்து திருமணச் சட்டம் அமலுக்கு வந்த நாள்.
1955-ம் வருடம் மே மாதம் 18-ந் தேதிக்கு முன்பாக ஒரு இந்து ஆண் எத்தனை மனைவிகள் எத்தனை ஆசை நாயகிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஒரு இந்து ஆண் ஒரு பெண்ணுக்கு மேலாக திருமணம் செய்து கொள்ள முடியாதபடி “ஒருவனுக்கு ஒருத்தி” தத்துவத்தை 18.5.1955 முதல் அதிரடியாக அமல்படுத்தியது. இந்து “திருமணச் சட்டம் 1955”. (ஆனால் இந்த அதிரடி திருத்தத்தை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொண்டது இந்து சமயத்தின் உயர்ந்த பண்பாட்டை பறைசாற்றியது). இதற்கு முன்பாக இந்துக்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த முக்கியமான சட்டம் எதுவும் இல்லை. நீதிமன்றங்கள் இந்து குடும்ப வழக்குகளை இந்து புனித நூல்களில் உள்ள நியதிப்படியே விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தன.
வேதகாலத்திலும் தமிழகத்தில் சங்க காலத்திலும் அதற்கு பின்னரும் இந்து பெண்களின் நிலைமை மேம்பட்டு இருந்தது. ஆனால் இஸ்லாமிய படையெடுப்பின் பின்னரும் வெள்ளையர் ஆட்சியிலும் இது மிகவும் சீர்கேடு அடைந்தது. பெண்களுக்கு நீதி என்ற பெயரில் அநீதி மட்டுமே இழைக்கப்பட்டது. குறிப்பாக சிறுமியர் சிறுவர் திருமணம். இதில் கணவன் 10 வயதிலேயே இறந்துவிட்டால் அவனது 5 வயது மனைவி வெள்ளை ஆடை உடுத்தி தலையை மொட்டையடித்து இறுதிக் காலம் வரை நோன்பு இருக்க வேண்டும். அவளுக்கு தனியான சுவையற்ற சாப்பாடு மட்டுமே வழங்கப்படும் அல்லது பட்டினியாக இருக்க வேண்டும். அவள் சுப நிகழ்ச்சிகள் எதிலும் பங்குகொள்ள அனுமதிக்க மாட்டார்கள். தனிமைதான் அவருக்கு தண்டனை.
இது ஒருபுறம் இருக்க உடன்கட்டை ஏறுதல் (சதி) முதலில் அரசு குடும்பங்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக இருந்தபோதிலும் பிற்காலத்தில் நால்வகை இந்து சமூகத்தவருக்கும் இடையே பரவிவிட்டது. விரும்பி கணவனோடு அல்லது கற்பை காக்க தீப்புகுந்த பெண்கள் பலர். ஆனால் சொத்துக்கு ஆசைப்பட்டு பங்காளியின் மனைவியை இழுத்துச் சென்று தீயில் தள்ளியதால் கொல்லப்பட்ட பெண்கள் ஏராளம். உடன்கட்டை ஏற மறுத்த பெண்களுக்கு போதைப் பொருட்கள் தரப்பட்டு மயங்கிய நிலையில் தீயில் எரிக்கப்பட்ட பெண்கள் இன்னும் ஏராளம்.
இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பல பகுதிகள் ஆங்கிலேயர் கைக்கு மாறின. அப்பகுதிகளை கவர்னர் ஜெனரல்கள் நிர்வகித்தனர். இவர்களில் முதன்முதலாக இந்து சமய பெண் கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்தியவர் வில்லியம் பென்டிங்பிரபு ஆவார். கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் உடன்கட்டை ஏறுதலை 4.12.1829 முதல் தடை செய்து அவர் சட்டம் பிறப்பித்தார்.
அடுத்ததாக “விவாதர்ணவசேது” என்ற இந்து சட்ட சமஸ்கிருத நூலை வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆங்கிலத்தில் “ஜென்டூலாஸ்” என்று மொழி பெயர்த்து வெளியிட்டார். அடுத்து இந்து விதவைகளுக்கு மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கி 1856-ம் ஆண்டின் இந்து விதவை பெண்கள் மறுமணச்சட்டம் இயற்றப்பட்டது. 1872-ம் ஆண்டு மற்றவற்றுடன் இந்து திருமணங்களையும் பதிவு செய்ய சிறப்பு திருமணச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் 1947-ம் ஆண்டு தனியாக இந்து திருமணச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது பல திருத்தங்கள் புகுத்தல்களுக்கு பின் சட்டமாக இயற்றப்பட்டு 18.5.1955 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் பல அதிரடி மாறுதல்களை இந்து சமுதாயத்தில் புகுத்தியது.
18.5.1955 முதல் ஒரு ஆண் இந்துவுக்கு ஒரு மனைவிதான் என்றும் அதை மீறி இரண்டாவது திருமணம் செய்தால் 7ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் என்றும் சட்டம் தடுத்தது. “சின்னவீடு” வைத்துக் கொள்வது கூட விவாகரத்துக்கு ஒரு காரணம் ஆக்கப்பட்டது.
அடுத்ததாக குழந்தை திருமணங்களை இந்த சட்டம் அடியோடு தடுத்து நிறுத்தியது. திருமணம் செய்து கொள்ள ஆணுக்கு 18 வயதும் பெண்ணுக்கு 15 வயதும் நிரம்பி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. (பின்னர் 1978-ம் ஆண்டு வயது வரம்பு ஆணுக்கு 21 பெண்ணுக்கு 18 என்று உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது)
அடுத்ததாக இந்த சட்டம் இந்துக்களிடையே “விவாகரத்து” என்ற திருமண கலைப்பை நிலை நிறுத்தியது. இதில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கட்டாய ஜீவனாம்சம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மேலே “மறுமணம்” என்பது சட்டப்படி முறைப்படுத்தப்பட்டது. அப்போது இருந்த சனாதனவாதிகளும் பழமைவாதிகளும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சட்டத்தை அங்கீகரிக்க மறுக்கவே அவருக்கும் பிரதமர் நேருவுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. அவ்வகையில் முதன் முதலாக ஜனாதிபதி பிரதமர் மோதலை ஏற்படுத்திய சட்டம் இதுவாகும். இறுதியில் நேருவின் பிடிவாதமே வென்றது.
இன்னுமொரு சிறப்பியல்பு முதன்முதலாக இந்துக்கள் என்றால் யார் யார் என்று வகைப்படுத்தியதும் இந்த சட்டம்தான். சமணர் பவுத்தர் சீக்கியர் ஆகிய சிறுபான்மையினரும் லிங்காயத்து ஆரிய சமாஜம் போன்ற உட்பிரிவினரும் இந்துக்களாக்கப்பட்டனர். இந்தவகையில் இந்து சமய ஒற்றுமைக்கு இச்சட்டம் முதலில் வித்திட்டது என்றும் கூறலாம். ஆனால் பழங்குடிகள் ஆதிவாசிகள் பழக்க வழக்கங்களுக்கு சட்டத்தின் கடுமையான கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. 1969-ல் முதல்-அமைச்சர் அண்ணாவின் முயற்சியால் சீர்திருத்த திருமணங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடைசியாக இந்து திருமணங்களை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவு செய்து திருமணச்சான்று பெறலாம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் திருமணத்தில் குறிப்பாக பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இச் சட்டம் வந்தபின் பல்லாயிரக்கணக்கான ருசிகரமான வழக்குகளில் நீதிமன்றங்கள் மிக முக்கியமான தீர்ப்புகளை வழங்கி உள்ளன. உதாரணமாக பார்சி மதத்தை சார்ந்த பெரொஸ் காந்திக்கும் காஷ்மீர் பிராமணர் ஆன இந்திராகாந்திக்கும் பிறந்த சஞ்சய்காந்தி இந்துவா? இல்லையா? என்று தொடரப்பட்ட வழக்கில் 1984-ல் டெல்லி உயர்நீதி மன்றம் சஞ்சய்காந்தி “வளர்ப்பினால்” இந்துதான் என்று தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் பிரபலங்களின் திருமண வழக்குகளில் குறிப்பாக நடிகை சரிதாவின் முதல் கணவர் வெங்கடசுப்பையா தனது மனைவியை தன்னுடன் வந்து வாழ்வதற்கு (திருமண உறவு கொள்வதற்கு) நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று கேட்டபோது ஒருவரின் உடலை அவரது சம்மதமின்றி வேறு ஒருவர் ஆக்கிரமிப்பது மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல். அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
நடிகர் பிரசாந்தின் மனைவி முதல் திருமணத்தை மறைத்ததால் அவர் நடிகர் பிரசாந்தை திருமணம் செய்துகொண்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சமீபத்தில் கூட நடிகை சுகன்யா அமெரிக்க கணவரை பிரிந்து வந்தபோது சென்னை உயர்நீதி மன்றம் குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு வாதங்களை ஊடகங்களில் வெளியிட முடியாது என்று தடை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 65 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரிய மாறுதல்கள் இன்றி இளமையுடன் “இந்து திருமணச் சட்டம் 1955” திகழ்கிறது என்பது இந்து சமுதாயம் சட்டத்தின் ஆளுமைக்கு தலை வணங்குகிறது என்பதன் எடுத்துக்காட்டு.