தாய்மை-குழந்தை பராமரிப்பு

இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது?

கூட்டுக்குடும்பங்கள், பெரியவர்களுக்கு முக்கியத்துவம், கட்டுப்பாடுகள், விருந்தோம்பல், பண்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், பகிர்தல், சேர்ந்து வேலை செய்தல், கண்டிப்பு, சின்ன சின்ன சந்தோஷங்கள், இயற்கையோடு ஒத்து வாழ்தல், எளிய பாரம்பரிய உணவு முறை, வீட்டு வேலை பார்த்தல், விளையாடுதல், கோவிலுக்கு செல்லுதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பயம் கலந்த மரியாதை, தோட்டம் மற்றும் வயல் வேலை என்று ஒரு நிஜமான வாழ்க்கை அது.

ஒரு குழந்தை தவறு செய்தால் பெற்றோர் மட்டுமின்றி உற்றார் உறவினர், ஆசிரியர் என்று எல்லோரும் உரிமை எடுத்து திருத்துவர். உதாரணமாக இது போன்ற சம்பவம் உங்கள் வீடுகளிலும் நடந்திருக்கும். பையன் தலைகீழாக நின்று கல்லூரி சுற்றுலா பயணத்திற்கு தந்தையிடம் ஒப்புதல் வாங்கி வைத்திருந்த நேரத்தில் ஊரிலிருந்து வந்த பெரிசு“இதெல்லாம் அனுப்பலாமா? பயமில்லையா?” என்று முட்டுக்கட்டை போடுவார். பையனுக்கு அது இடிபோல் இருந்தாலும் அதில் குடும்ப நலன் இருக்கும்.

அது ஒரு நிரந்தரப் பாடம் கற்பிக்கும். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக்கொடுக்கும், ஏமாற்றங்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கும். வாழ்க்கையில் எப்பொழுதும் நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்ற மமதை விலகும்.இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது?

100 சதவீதம் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஏற்க மனம் இல்லை என்றாலும் உண்மை அதுவே. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
ஒன்று எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அறிவியல் பூர்வமாக பகுத்தறிகிறார்கள். மற்றொன்று இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி வளர்ச்சி.
ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஆக்கபூர்வமாக அவர்களுக்கு பயன்படுகிறதா என்றால் பெரும்பாலான வர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஏன் அப்படியில்லை?

இன்றைய இளைஞன் தனிமையையே விரும்புகிறான். சதா சர்வகாலமும் செல்போனை பார்த்து கொண்டு மிகப்பெரிய சோம்பேறியாக வலம் வருகிறான்.
தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணம். யாரும் தன் முடிவில் தலையிடுவதை விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் பேசிப்பழக முற்படுவதில்லை.

பெற்றோருக்கோ, உறவுகளுக்கோ அல்லது பிறருக்கோ உதவத் தோன்றுவது இல்லை. இந்த மனநிலை எதனால் ஏற்பட்டது? என்ற கேள்வியை கண்களை மூடிக்கொண்டு நிதானமாக ஓரிரு நிமிடங்கள் யோசியுங்கள். அனேகம் பேரின் மனதில் உதித்த பதில் செல்போன் தானே? ஆனால் உண்மையில் என்ன காரணம் தெரியுமா? பெற்றோர்களாகிய நாம் தான் காரணம். அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?

நாங்கள் அப்படி என்ன செய்து விட்டோம் என்கிறீர்களா?

நம் தகுதிக்கு மீறி இருப்பதிலேயே மிக அதிக கட்டணம் உள்ள பள்ளியில் அடித்து பிடித்து சிபாரிசு வைத்துசேர்த்து படிக்க வைக்கவில்லையா? பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர டான்ஸ், சூம்பா, நீச்சல், டியூசன் என்று பணத்தை கரைக்கவில்லையா? புதிதாக வந்த விலை உயர்ந்த போன்,பிராண்ட் சர்ட்- பேண்டுகள் என்று வாங்கிக் குவிக்க வில்லையா? நண்பர்களின் பெற்றோர்கள் வைத்திருக்கும் பைக், காரைவிட பிராண்டட் காரில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதன் தவணையை கட்ட மாதா மாதம் இன்னும் கொஞ்சம் மூச்சிரைக்க ஓடவில்லையா?வாழ்க்கை முழுவதும் தான் சைக்கிள் மிதித்தாலும் கல்லூரிக்கு போகும் மகனுக்கு பைக் வாங்கி கொடுக்கவில்லையா? இவ்வளவும் சாத்தியமாவதற்கு எவ்வளவு சிரமங்கள் பட்டிருக்கிறோம். இதனை பிள்ளைகளிடம் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகள் தடம் புரள காரணமாக இருக்க முடியும்? என்று கோபம் கொப்பளிக்கின்றதா? ஒரேயரு கேள்வி… மேற்சொன்னவற்றில் ஏதேனும் அந்த குழந்தை உங்களிடம் கேட்டதா?

பணத்தால் வாங்கக் கூடிய விஷயங்கள் எதுவுமே ஒரு குழந்தைக்கு அதிக நேரம் திருப்தியை தராது. குழந்தை ஆசைப்பட்டு ஒன்றை கேட்டாலுமே நம்மால் வாங்கி தர இயலாது. அது நம் தகுதிக்கு மீறியது என்ற உண்மையை கனிவாக புரியும்படி கூறினால் எந்த குழந்தையுமே அதை கேட்டு வம்படிக்காது. பெரிய மனிதன் போல புரிந்து கொள்ளும். மாறாக உண்மை நிலையை மறைத்து நம் பொய்யான கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள ஒரு மாயையான உலகத்தை அக்குழந்தைக்கு சிறுவயது முதல் பழக்கிக் கொடுக்கிறோம்.நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்று ஒரு காலகட்டத்தில் அது நம்பத் தொடங்குகிறது. இதனால் ஒரு சிறு தோல்வியைக்கூட அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனவே தான் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். வெற்றி என்றால் சந்தோஷப்படுங்கள். தோல்வி என்றால் அதிலுள்ள பாடத்தைக் கற்றுக்கொண்டு நகருங்கள் என்று அக்குழந்தையிடம் பெற்றோராகிய நாம்தானே கூறவேண்டும். மாறாக ஒரு பளபளக்கும் வாழ்க்கையை காட்டி அவர்களை பிடிவாதக்காரர்களாக்கிவிட்டு பின்னர் அவர்களை எப்படி கையாள்வது என்று தவிக்கிறோம்.

உங்களுக்கு தெரியுமா? பணத்தால் வாங்கவே முடியாத ஒன்றே ஒன்றைத்தான் ஒரு குழந்தை உங்களிடம் எதிர்பார்க்கிறது. அதுதான் “நேரம்”. உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் அஸ்திவாரமே தவிர உங்கள் பணமும் பொருளும் அல்ல. பெற்றோர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளுடன் குறைந்தது அரை மணிநேரமாவது நேரத்தை செலவழிக்க வேண்டும். போன், டி.வி. செய்தித்தாள் என்று எந்த இடையூரும் இன்றி மனம் விட்டு பொய் அகற்றி பேச முற்பட்டால் உங்கள் கண்முன்னால் மாற்றங்களை காணலாம்.வீட்டு வேலைகளை உங்கள் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுங்கள். அதை செய்யும் நேரத்தில் இன்னொரு நான்கு பக்கங்கள் படித்து நான்கு மதிப்பெண்கள் கூடப் பெறலாம் என்று எண்ணாதீர்கள். அவர்கள் முதலில் வாழ்க்கையை கற்கட்டும். வாழ்வாதாரம் தானாக வந்தடையும். குழந்தைகள் கேட்பதெல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்கள் “இல்லை”கள் தான் அதற்கு நிஜத்தை கற்றுக்கொடுக்கும்.

சரியான விகிதத்தில் அரவணைப்பும் கண்டிப்பும் கலந்து கொடுத்தால் அதாவது நம்முடைய பெற்றோர் போல் நாமும் நடந்துகொண்டால், நம்மைப்போல் நம் குழந்தைகளும் மனிதம் நிறைந்த சிறந்த பிள்ளைகளாக, சாதனையாளர்களாக திகழ்வார்கள். வாருங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker