ஆரோக்கியம்மருத்துவம்

வலிகளில் இருந்து விடுபடுங்கள்…

ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை உள்ளிட்ட விஷயங்களுக்காக நம் உடலை மறந்து போகிறோம். உங்களை பார்த்துத்தான் உங்கள் குழந்தை வளர்கிறது. எனவே, நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். வலிகள் இன்றியும், அவ்வாறு இருந்தால் அதில் இருந்து விடுபடவும், எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ளவும் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

நீங்கள் உறங்கும் படுக்கை அதிக கடினமாகவோ அல்லது மிகவும் லேசாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். காரணம் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளை தவிர்க்க இந்த தேர்வு உதவும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் கழுத்து வலி, தோள்பட்டை வலியை தவிர்க்கலாம்.தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருக்குமே வேலைப்பளு காரணமாக அசதி, சோர்வு ஏற்படும். சரியான நேரம் தூங்கினால்தான் உங்கள் தசை. மூட்டு மற்றும் உடல் சீராக இயங்கும்.

பெண்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால், உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களுக்கு என உடற்பயிற்சி செய்ய நேரம் செலவிடுங்கள்.

ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்வது அவசியம். இதனால் உடல் தசைகள், மூட்டு இலகுவாகும். தசை இழுப்பு பயிற்சிகள் செய்வதும் அவசியம். காலை எழுந்தவுடன் 10 நிமிடங்கள் இவற்றை செய்தல் வேண்டும்.

இதனால் மன அழுத்தம் குறையும். பெண்களுக்கு முதுகு வலி அடிக்கடி வரும். முதுகு தசைப்பயிற்சி செய்வதனால், இதைக் கட்டுப்படுத்தலாம். சரியான காலணிகள் அணிவதன் மூலம், முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளைத் தவிர்க்கலாம்.

உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். அதற்கு தக்கபடி உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்கவும். ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறையாவது விளையாடுங்கள்.

கம்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலி பயன்படுத்தவும். நீங்கள் உண்ணும் உணவில் புரத சத்து மிகவும் அவசியம். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். அவ்வாறு இருப்பதால் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker