ஆரோக்கியம்

பிரசவத்துக்கு பிந்தைய நாட்களில் தாய்மார்களின் மனரீதியிலான மாற்றங்கள்

‘போஸ்ட்பார்ட்டம்’ இந்த வார்த்தையை பலர் அறிந்திருப்போம். ‘பார்ட்டம்’ என்றால், ‘பிரசவம்’ என்று அர்த்தம்.

பிரசவத்துக்கு பிறகான காலகட்டம் என்பதுதான் ‘போஸ்ட் பார்ட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த முதல் ஆறு வாரங்கள் வரையிலான காலத்தை, ‘ஆரம்ப நிலை போஸ்ட்பார்ட்டம்’ என்றும், அதற்கு அடுத்த மூன்று மாதங்கள் வரையிலான காலத்தை ‘டிலேய்டு போஸ்ட்பார்ட்டம்’ என்றும் சொல்கிறோம். கருவுறும்போது பெண்கள் எப்படி உடல், மன ரீதியிலான மாற்றங்களை சந்திக்கிறார்களோ, அதேபோல் இந்த போஸ்ட்பார்ட்டம் காலத்திலும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள்.



ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது உடல் அளவில் என்னென்ன மாற்றங்களை சந்தித்தாரோ, பிரசவத்துக்கு பிறகு அதிலிருந்து அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறார். எல்லா தாய்மார்களுக்கும், குழந்தை பிறந்தவுடனேயே தங்கள் குழந்தையின் மீது பிணைப்பு வந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு இந்த பிணைப்பு உடனடியாக வராது. கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை பிரசவவலியை அனுபவித்த பிறகுதான், ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

இதன் காரணமாக அவர் மிகவும் சோர்வாக இருப்பார். இதுவே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தால் தாய்க்கு அது சார்ந்த வலி, சோர்வு இரண்டுமே இருக்கும். அலுத்துக் களைத்திருக்கும் தாயின் மனம் ஓய்வை நாடும். இதற்கிடையே, அந்த நேரத்தில் பிறந்த பிஞ்சுக்குழந்தை அழுதுகொண்டே இருக்கும். நேரம் பார்த்து, குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்ட வேண்டும். ஒருபக்கம் உடல் அவஸ்தைகள், மறுபக்கம் குழந்தை பராமரிப்பு என்று அழுத்த, அந்த தாய்க்கு தூக்கம் சரியாக இருக்காது.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை பழக்கத்தில் இருந்தது. அதனால் வீட்டு பெரியவர்கள் வழிகாட்ட அத்தை, சித்தி என்று மற்ற பெண்மணிகள் ஒத்தாசை செய்ய, புதிதாக பூமிக்கு வரும் குழந்தையை ஒரு தாயால் நிம்மதியுடன் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது அவரவர் தாயார் அல்லது மாமியார் மட்டுமே பிரசவத்துக்கு துணையாக இருக்கிறார்கள். எப்படி தன் மகளுக்கு அல்லது மருமகளுக்கு இதுபோன்ற சமயங்களில் தோள்கொடுக்க வேண்டும் என்று இவர்களில் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக, குழந்தையை சரியாக பார்த்துக்கொள்கிறோமா, இல்லையா என்கிற மனப் பதற்றத்துக்கு தாய் ஆளாகிவிடுகிறார்.



இதுகுறித்த கவலையே அவரை பிரதானமாக ஆக்கிரமித்து கொள்வதால், பல தாய்மார்களுக்கு பிரசவித்த உடனேயே தங்கள் குழந்தை மேல் பிணைப்பு வந்துவிடுவதில்லை. அதற்கு அவர்களுக்கு குறைந்தது இரண்டு வாரங்களாவது தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு மூன்று மாதங்கள்கூட பிடிக்கலாம். ஏனென்றால், குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்கள்வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, சுத்தம் செய்வது, குளிப்பாட்டுவது என்றிருக்கத்தான் தாய்க்கு நேரம் சரியாக இருக்கும்.

மூன்று மாதங்களுக்கு பிறகுதான் குழந்தை, தாயின் செய்கைகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பிக்கும். தாய் சிரித்தால் குழந்தையும் சிரிக்கும். கொஞ்சி அழைத்தால், திரும்பி பார்க்கும். தாயுடன் விளையாட ஆரம்பிக்கும். இப்படித்தான் ஒரு தாய்க்கு தன் குழந்தை மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பிணைப்பு வர ஆரம்பிக்கும். அதனால் ‘போஸ்ட்பார்ட்டம்’ காலகட்டத்தில், ‘என்னடா நமக்கு நம் குழந்தையின் மேல் பிணைப்பே வரவில்லை’ என்று தாய் வருந்த வேண்டிய அவசியம் இல்லை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker