இளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரை
இன்று மனிதர்கள் கவலையாலும், டென்ஷனாலும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டு நீரிழிவு, இரத்த அழுத்தம், மூட்டு வலி, முதுகு வலி, இதய நோய் போன்ற பல நோய்களால் அவதிப்படுகின்றனர். என்ன காரணம்? இந்த உடல் என்ற இயந்திரத்தை சரியாக இயக்கத் தெரியவில்லை. உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மூன்று முக்கிய அங்கங்கள் உள்ளன.
- வாதம் – காற்று
- பித்தம் – நெருப்பு
- சிலேத்துமம் – நீர்
இந்த மூன்றும் சரியான அளவில் உடலில் இயங்கினால் நோயே வராது.
மனிதனின் கைவிரல்கள்:
நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்கள் ஒவ்வொரு நரம்புடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு நரம்புகளும் நமது கைவிரல்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.
கட்டைவிரல் – நெருப்பு
ஆள்காட்டி விரல் – காற்று
நடுவிரல் – ஆகாயம்
மோதிர விரல் – நிலம்
சுண்டு விரல் – நீர்
முத்திரை
முத்திரை என்பது நமது உடலில் உள்ள விரல்களை ஒன்றுடன் ஒன்று இலேசாக அழுத்தி அதன் மூலம் நமது உடலில் உள்ள பஞ்சபூதங்களை சரியாக இயங்கச் செய்துவது முத்திரை எனப்படும். இதன்மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம். மனித உடலில் 72,000 நாடி நரம்புகள் உள்ளன. இவை அனைத்தும், நமது விரல்களில் தொடர்புடையதாகும். ஒவ்வொரு விரல்களை சேர்த்து அழுத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் எந்த இடத்தில் இரத்த ஓட்டம், பிராணன் தடைபெற்றுள்ளதோ அதனை சரிசெய்து சிறப்பாக இயங்கச் செய்கின்றது.
இதுவரை நம் உடல் என்ற இயந்திரத்தின் உயிர்நாடி நமது கை விரல்கள் என்பதை அறியாமல் வாழ்ந்து விட்டோம். இப்பொழுது இதுவரை என்னிடம் ஒன்றுமில்லை என்று கையை விரித்தார்கள், இந்த கையில் உள்ள பத்துவிரல்களும்தான் நம் வாழ்க்கையின் மூலதனம் என்பதை உணரப் போகின்றீர்கள். என் கையில் ஒன்றுமில்லை என்பது மூடத்தனம், கைவிரல்கள் பத்தும் நம் வாழ்வின் மூலதனம்.
முத்திரை தீர்க்கும் நோய்கள்
நீரிழிவு, இரத்த அழுத்தம், மன அழுத்தம், தொந்தி குறையும், உடல் எடை குறையும், மூட்டு வலி, முதுகுவலி நீங்கும். ஒற்றைத் தலைவலி நீங்கும். குடல் சம்பந்தப்பட்ட வியாதி நீங்கும், ஞாபக சக்தி வளரும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நேர்மறையான எண்ணம் வளரும்.
முத்திரையை யார் செய்யலாம்
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அதாவது 7 வயது சிறுவர் முதல் 100 வயது பெரியவர் வரை செய்யலாம்.
முத்திரையை எந்த நேரத்தில் செய்யலாம்?
காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் செய்யலாம். சாப்பிட்டிருந்தால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் இடைவெளி வேண்டும்.
எத்திசை நோக்கி செய்ய வேண்டும்?
கிழக்கு திசை, மேற்கு திசை நோக்கி செய்யலாம்.
என்ன ஆசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்?
வஜ்ராசனம், பத்மாசனத்தில் செய்யலாம். முடியாதவர்கள் சுக ஆசனத்தில் சாதாரணமாக அமர்ந்து செய்யலாம். மிகவும் வயதானவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். முத்திரைகள் செய்யும் பொழுது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிச் செய்வது நல்லது. அப்பொழுது வலதுமூளை வேலை செய்யும். மனம் ஒரு நிலைப்படும்.
ஒவ்வொரு முத்திரையையும் இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இறுக்கமான உடை அணிவது, இடுப்பில் செல்போன் வைப்பது, கண்ணாடி அணிவது முதலியவை தவிர்த்து தளர்வான உடை அணியவும். நல்ல சுத்தமான, காற்றோட்டமான இடத்தில் தரையில் ஒரு மேட் (விரிப்பு) விரித்து அதில் அமர்ந்து செய்வது நல்ல பலன் தரும். ஒவ்வொரு வியாதி நீக்கும் முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை விரிவாகக் காண்போம்.
சூன்ய முத்திரை
காது வலி, கழுத்துவலி, தைராய்டு பிரச்சனைகளை நீக்கும் சூன்ய முத்திரை
பொதுவாக நிறைய மனிதர்கள் காதுவலியினால் அவதிப்படுகின்றனர். சிலருக்கு காதில் அதிக அழுக்கு சேர்வதால் காதுவலி வரும். சிலருக்கு குளிக்கும் பொழுது காதில் நீர் சென்றுவிடும், அதனால் வலி வருகின்றது. மேலும் உடலில் சளி அதிகமானால் காதுவலி வரும். உடல் சூடு அதிகமானால் காது வலி வரும். காதுவலி பற்றி கவலைப்பட்டவர்கள் இங்கே கொடுத்துள்ள முத்திரையை அதாவது சூன்ய முத்திரையை செய்தால் காது வலி பறந்து விடும்.
காதுவலி இல்லாதவர்களும் இதனைப் பயிலுங்கள். காதில் உள்ள நரம்புகள் பலப்படும். எவ்வளவு வயதானாலும் காதுவலி வராமல் தடுக்கப்படும். இன்றைய நவீன உலகில் மன அழுத்தம், டென்ஷன், படபடப்பினால் கழுத்து நரம்புகளுக்கு இரத்தம் சரியாகச் செல்லாமல் கழுத்து வலி வரும். மூளையிலிருந்து பிரியும் சிந்தனையைத் தூண்டும் நரம்புகள் அதிக சிந்தனையினால் இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாமல் பாதிக்கப்பட்டு அதனால் கழுத்துவலி வரும்.
இருசக்கர வாகனம் அதிகம் ஓட்டினால் கழுத்துவலி வரும். கம்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி வரும். அதிகமான எடையை சுமந்தால் கழுத்து வலி வரும். இந்த கழுத்துவலிக்கு பல மருந்துகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கழுத்து வலியுடன் மனதில் கவலை என்ற வலியும் வந்துவிடுகின்றது. அவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையுடன் தினமும் பதினைந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் பயிற்சி செய்யுங்கள். கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படும். கழுத்துவலி நீங்கும். கவலை வேண்டாம்.
இவ்வளவு அற்புத பலன்களைத் தரும் சூன்ய முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
சூன்ய முத்திரை செய்முறை
முதலில் நல்ல சுத்தமான காற்றோட்டம் உள்ள இடத்தில் தரையில் ஒரு மேட் விரித்து அதில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூன்று முதல் ஐந்து முறை மூச்சை இரு நாசி வழியாக மிக மெதுவாக இழுத்து, மிக மெதுவாக வெளிவிடவும். பின் நமது நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும் (படத்தை பார்க்க) இந்த நிலையில் முதலில் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஒரு பதினைந்து நாட்கள் கழித்து பத்து நிமிடங்கள் இருக்கவும். செய்து முடித்தவுடன் கை விரல்களை சாதாரணமாக வைத்து ஓரு நிமிடம் கண்களை மூடி மூச்சை மட்டும் கவனிக்கவும். பின் எழுந்து விடலாம்.
இந்த முத்திரை செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை
முத்திரை செய்யும் பொழுது கவனம், சிந்தனை வேறெங்கும் செல்லக் கூடாது. அதற்கு உங்கள் கவனத்தை விரலில் கொடுக்கும் அழுத்தத்தில் நிலை நிறுத்தவும். நம்பிக்கையுடன் செய்யுங்கள். முத்திரையில் இருக்கும் பொழுது உங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கலாம். முத்திரையை தனிமையில் அமர்ந்து செய்யுங்கள். பயிற்சியின் பொழுது பேசக்கூடாது. குறிப்பாக செல்போனை அணைத்துவிடுங்கள்.
இது ஒரு தெய்வீகக் கலை. நம் உடம்பில் உள்ள அற்புத ஆற்றலை வளர்க்கும் கலை. நம் சித்தர்கள் பல வருடங்கள் தவம் செய்து உடலை ஆராய்ச்சி செய்து நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கச் செய்ய அருளிய அருமையான கலை என்பதை உள்ளத்தில் நிறுத்தி நிதானமாக, பொறுமையாக, அன்புடன் பயிற்சி செய்யுங்கள்.
முதலில் மனிதன் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தன் உடலை, உடல் உறுப்புக்களை நேசிக்கும் அற்புதக்கலைதான் இந்த முத்திரையாகும். சூன்ய முத்திரையை செய்து அனைவரும் இளமையுடன் அழகுடன், அழகாக வாழுங்கள்.