ஆரோக்கியம்மருத்துவம்

குறைவான எண்ணெய், ஆரோக்கியமான உணவுகள்

பொறித்த உணவுகளைச் சாப்பிடும் பொழுதெல்லாம் உணவில் எண்ணெயைக் குறைக்க வேண்டும், பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நம் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருக்கும்.

எண்ணெயில் பொறித்தெடுக்கும் உணவின் ருசி எண்ணெயைக் கொஞ்சமாக உபயோகிக்கும் பொழுது வருமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா. குறைவான எண்ணெயில் உணவின் ருசி மாறாமல் மொறு மொறுப்பான, சுவையான உணவுகளை வழங்குவதற்காக வைத்திருப்பவைதான் ஏர் ப்ரையர்கள்.



ஏர் ப்ரையர் என்ற ஒரு இயந்திர விசிறியானது சூடான வெப்பக்காற்றை உணவுப் பொருளைச் சுற்றி அதிவேகமாக சுழற்றி அதன் மூலம் உணவைச் சமைக்கின்றது. இந்த அதிவேகமான வெப்பக் காற்றினால் உணவுப் பொருளின் மேலடுக்கு மிருதுவாகவும், மொறு, மொறுப்பாகவும் மாறுகின்றது.

என்ன சமைக்கலாம்?

ஒரு சிறிய தேக்கரண்டி எண்ணெயைப் பயன்படுத்தி சிக்கன், மட்டன், மீன், காய்கறிகள் மற்றும் உறைந்த உணவுகளையும் சமைக்கலாம்.

உறைந்த உணவுகள் (ப்ரோஸன் புட்) ஏர் ப்ரையரில் சமைக்கப்படும்பொழுது மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏர் ப்ரையர்களின் சில மாதிரிகளில் உணவுகளை பேக் செய்யலாம், க்ரில் செய்யலாம், வறுக்கலாம், பொறிக்கலாம்.

ப்ரன்ச் ப்ரைஸானது ஏர் ப்ரையரில் செய்யப்படும் சிறந்த உறைந்த உணவுப் பொருளுக்கு உதாரணமாக விளங்குகிறது. குறைந்த நேரத்தில் ஆரோக்கியமாகவும், மொறு மொறுப்பாகவும் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த உணவைச் சொல்லலாம்.




நன்மைகள்

* உபயோகிக்க எளிதாகவும், வசதியாகவும் சுத்தம் செய்ய இலகுவாகவும் இருக்கிறது.

* அதிக சக்தி வாய்ந்தது.

* அதிக சத்தத்தை ஏற்படுத்துவதில்லை.

* குறைவான நேரத்தில் சமையல் செய்ய முடியும்.

* ஏர் ப்ரையரைப் பயன்படுத்தி சமைக்கும்பொழுது சூடானது சமையலறையில் பரவுவதில்லை.

* எண்ணெயை சமைக்கப் போகின்ற உணவின் மீது தடவியோ அல்லது தூவி வைத்தாலே மொறு மொறுப்பான, மிருதுவான பொறித்த, வறுத்த ஐட்டம் ரெடி.

* அதில் உணவு சமைக்கும் கூடையானது சிறிய மற்றும் பெரிய அளவுகளில் இருப்பதால் அதற்கேற்றாற்போல் உணவைச் சமைக்கலாம்.

* குறைந்த மின்சார நுகர்வு.

* வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பு இருப்பதால் சமைக்கும் உணவிற்கு தகுந்தாற்போல் வெப்ப நிலையைச் சரிசெய்து கொள்ளலாம். சுழலும் குமிழ் அல்லது தொடு பொத்தான் மூலம் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.

* இதில் இருக்கும் டைமர் செயல்பாட்டின் மூலம் உணவு சமைக்கும் நேரத்தை செட் செய்து விட்டு மற்ற பணிகளில் கவனத்தைச் செலுத்தலாம். உணவு சமைத்து முடித்தவுடன், டைமரானது உங்களுக்கு ஓசையின் மூலம் அறிவிப்பு தரும்.

* நவீன ஏர் ப்ரையர்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளே யூனிட்டுகள் இருப்பதால் உணவை சமைக்கும்போது கண்காணிக்க உதவுகின்றது. சக்தி, வெப்ப நிலை மற்றும் டைமர் விவரங்கள் போன்ற பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.

* ஆட்டோ மோட் வசதியானது உணவு சமைத்து முடித்தவுடன் தானாகவே மின் விநியோகத்தை துண்டித்துக் கொள்கின்றது. இதனால் உணவு அதிக வெப்பமாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், சக்தி சேமிப்பு மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.

* இரண்டு விதமான உணவுகளை ஒரே நேரத்தில் சமைக்கக்கூடிய வசதிகளுடனும் ஏர் ப்ரையர்கள் வந்துள்ளன.

* ஏர் ப்ரையர்களில் சமைக்கப்படும் உணவுகள் பாதுகாப்பானதாவும், ஆரோக்கியமானதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளன.

* பயன்படுத்துபவர்களுக்கு நட்பாகவும், உபயோகமானதாகவும் உள்ளது.

* பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் எளிது.

* நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய விலையில் இருப்பது கூடுதல் சிறப்பு.

சுத்தம் செய்யும் முறை

* அதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் கூடை மற்றும் பேன்களை உபயோகித்தால் உணவுப் பொருள்களிலிருந்து ஒழுகும் எண்ணெய் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சுத்தம் செய்ய முடியும்.

* அதே போல் சமைப்பதற்கு முன் ஏர் ப்ரை கூடையினுள் நான்-ஸ்டிக் தெளிப்பான்களைத் தடவி உபயோகித்தால் சுத்தம் செய்வது எளிதாகும்.

* உள்ளிருக்கும் ட்ரே மற்றும் பேனை எடுத்து தண்ணீரில் அலச வேண்டும்.

* வெதுவெதுப்பான சோப்பு நீரில் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

* மென்மையான ப்ரஷ்ஷினால் தேய்த்துக் கழுவி, காய்ந்த பிறகு மெல்லிய துண்டால் துடைத்து பின்பு உபயோகப் படுத்தலாம்.

* வாரம் ஒரு முறையாவது ஏர் ப்ரையரை இது போலச் சுத்தப்படுத்தி வைத்துக் கொண்டால் அதனைப் பராமரிப்பது எளிதாகிவிடும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker