மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட குழந்தையை கண்டறிவது எப்படி?
ஒரு குழந்தை வளரும்போது, அவ்வப்போது சோகமாக, காயப்பட்டதுபோல், வருத்தமாக… இப்படிப் பல உணர்வுகளைக் கொண்டிருப்பது இயல்புதான். ஆனால், சில குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் நீண்ட நேரம் நீடிக்கலாம், இது அவர்களுடைய உணர்வு மற்றும் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு வரும் மனச்சோர்வு மிகவும் கவலை தரும் விஷயம். ஒரு குழந்தை எப்படிச் சிந்திக்கிறது, எப்படி உணர்கிறது மற்றும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை இது பாதிக்கக்கூடும், அந்தக் குழந்தையின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கக்கூடும்.
மனச்சோர்வு கொண்ட ஒரு குழந்தை இவ்வாறெல்லாம் இருக்கக் கூடும்:
* படிப்பில் அதன் ஆர்வம் குறையக்கூடும், பள்ளியில் அதன் செயல்திறன் திடீரென்று குறையக்கூடும்
* பள்ளிக்குச் செல்ல மறுக்கக்கூடும்
* அதன் கவனம் சிதறக்கூடும், படிப்பிலோ மற்ற வேலைகளிலோ கவனம் செலுத்த இயலாமல் இருக்கக் கூடும்
* எளிதில் களைப்படைந்து சோம்பேறித்தனமாக உணரக்கூடும்
* பசியெடுக்காமல், தூக்கம் இல்லாமல் இருக்கக்கூடும்
* சிந்தித்தல் மற்றும் தீர்மானம் எடுத்தலில் தடுமாறக்கூடும்
* சிறிய விஷயங்களுக்கும் எரிச்சல் அடையக்கூடும்
* காரணமில்லாமல் அழக்கூடும்
* தனக்குத் தலைவலி அல்லது வயிற்றுவலி என்று சொல்லக்கூடும், ஆனால் அந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்தால், அதற்கு எந்தப் பலனும் இருக்காது
* நண்பர்களுடன் விளையாட மறுக்கக்கூடும்
* அவர்கள் முன்பு மகிழ்ச்சியோடு செய்த செயல்களில் இப்போது ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும்