வீடு-தோட்டம்

வீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்

நகர்ப்புறம் அல்லது ஊர்ப்புறங்களில் அமைந்துள்ள வீடுகளை வாங்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை அல்லது அந்த சொத்தின் உரிமையாளரை நேரடியாகவோ சந்தித்து வீட்டின் விலை பற்றி விசாரிப்பது வழக்கம். அத்துடன், பக்கத்து ஏரியா வீட்டு விலை நிலவரங்களையும் கவனத்தில் கொண்டு, பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் சம்பந்தப்பட்ட வீட்டை வாங்க முடிவு செய்வார்கள்.

நிலம் மற்றும் கட்டிட மதிப்பு

குறிப்பிட்ட ஒரு பகுதியில் அமைந்துள்ள புதிய அல்லது பழைய வீடு வாங்க விரும்புபவர்கள், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கான விலை நிலவரம் பற்றி அரசின் பத்திரப் பதிவுத்துறை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு பகுதியில் அமைந்துள்ள தெருவில் உள்ள இடம் அல்லது மனைக்கான சந்தை வழிகாட்டி மதிப்பை பத்திரப் பதிவு இணையதளத்தில் பார்க்கும் பகுதியில் குறிப்பிட்ட தெருவை ‘கிளிக்’ செய்தால் கிடைக்கும் நிலம் மற்றும் கட்டிட மதிப்பு (Land & Building Valuation) என்ற தலைப்பின் கீழ் வீடுகளின் சந்தை மதிப்பை தெரிந்து கொள்ளலாம்.இரண்டு பிரிவுகள்

வீடுகளுக்கான மதிப்பை அறிய உதவும் அந்த இணையதளம் பகுதியில் அடுக்குமாடி வீடு, தனி வீடு என இரு பிரிவுகள் உள்ளன. அவற்றில் தேவைப்பட்ட ஒன்றை தேர்வு செய்து அங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் வீட்டின் மதிப்பு மற்றும் அதன் மனை மதிப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். அரசு பத்திரப்பதிவு இணையதளம் மூலம் இந்த தகவல்கள் தரப்படுவதால் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அடுக்குமாடி வீட்டின் தகவல்கள்

சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வீடு எந்தப் பகுதிக்கான எல்லைக்குள் அமைந்துள்ளது, அதன் யு.டி.எஸ் என்ற கட்டிடத் தளப்பரப்பு எவ்வளவு, வீட்டின் மொத்தச் சதுரஅடி அளவு, வீடு புதியதா, பழையதா, அதன் வயது, வீடு அமைந்துள்ள தளம், வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மர வகை, மேற்கூரை, தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள பதிகற்கள் ஆகியவை பற்றி தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வீடு அமைந்துள்ள மனை மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு ஆகியவை தனித்தனியாக அளிக்கப்படும். இதில் அதிகபட்சம் 60 ஆண்டுகள் ஆன கட்டிடத்தின் மதிப்பை மட்டுமே பார்க்க இயலும்.தனி வீட்டுக்கான தகவல்கள்

தனி வீடுகளுக்கான பகுதியில், வீடு அமைந்துள்ள பகுதி, அதன் பரப்பளவு, வீடு புதியதா அல்லது பழையதா, வீட்டின் வயது, அதில் உள்ள தளங்கள், மரங்களின் பயன்பாடு, உபயோகப்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், மேற்கூரை அமைப்பு, தரைத்தள டைல்ஸ் ஆகிய தகவல்களுடன் உள் கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்களையும் தர வேண்டும். மேலும், மின்சார வசதி, குடிநீர், சுற்றுச்சுவர் போன்ற விவரங்களையும் அளித்து, தனி வீட்டின் மதிப்பு மற்றும் அதன் மனை மதிப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும்.

மாறும் ரியல் எஸ்டேட் நிலவரங்கள்

மேற்குறிப்பிட்ட முறையில் அறிந்த மதிப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஒரு பகுதியில் உள்ள வீட்டைப் பார்வையிட்ட பின்னர் அதன் விலை குறித்து விசாரித்து, வாங்குவது தொடர்பாக முடிவெடுக்க வசதியாக இருக்கும். கேள்வி-பதில் முறையிலான தகவல்களின் அடிப்படையில் வீடு மற்றும் நிலத்தின் மதிப்பு பெறப்படுகிறது என்பதால் தற்போதைய ரியல் எஸ்டேட் சந்தை நிலவரங்களை மனதில் கொண்டு, அதன் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப வீட்டு விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்களை அறிய https://tnreginet.gov.in/portal/ என்ற இணைய தளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பு காணும் பகுதியில் கேட்கப்படும் தகவல்களை அளித்து விவரங்களைப் பெறலாம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker