எடிட்டர் சாய்ஸ்

உயிருக்கு உலை வைக்கும் செல்பி மோகம்..

காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை படம் எடுத்து செல்பி எனும் (தாமியாக) பதிவிட்டு ‘லைக்‘கிற்காக ஏங்கிக் காத்திருக்கிறது இன்றைய இளைஞர்கள் கூட்டம். செல்போன் பயன்பாடு நல்லது செய்கிறதா மனிதனுக்கு கெடுதல் செய்கிறதா என்று சமூக வெளியில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் அளவிற்கு இன்று செல்போன் நம்மிடையே வாழ்வில் கலந்து போன விஷயமாக அமைந்துள்ளது. அது தினமும் பல தகவல்களை உலக அளவில் அள்ளிக்கொண்டு வந்து வழங்கி வருகிறது.ஆரம்பத்தில் தகவல் தொடர்பிற்காக செல்போனை மருந்து போல பயன்படுத்தி வந்த மனிதன் இன்று அது மனிதனை அடிமைப்படுத்தும் மதுவின் போதை போல அமைந்துள்ளது. தாமி எனப்படும் செல்பி பட மோகம் மக்கள் மத்தியில் பெரிதும் வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. பிரபலங்கள் முன் படம் எடுப்பது, ரெயில் முன் படம் எடுப்பது, ஆளைக் கொல்லும் கொடிய மிருகங்கள் அருகே சென்று படம் எடுப்பது என்பது தொடங்கி அதிகாலை வாக்கிங் செல்பி, உடற்பயிற்சி நேரத்தில் செல்பி, குளியலறை செல்பி, உணவு நேர செல்பி, படுக்கை அறை செல்பிகள் என்று செய்யும் செயல் ஒவ்வொன்றினையும் குறித்து எடுக்கப்படும் செல்பிகள் மோகம் வளர்ந்து கொண்டே செல்கிறது.

இதுவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 90 மில்லியனுக்கு மேற்பட்ட படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு லைக் மற்றும் கமெண்ட்ஸ் பெறப்பட்டுள்ளது. இது நமக்கு செல்பி மீது இருக்கும் மோகத்தையும் அதன் காரணமாய் ஏற்படும் ஆபத்தை அலட்சியப்படுத்தும் போக்கினையும் உணர்த்துவதாய் உள்ளது.நடை, உடை, பேச்சு அணிகலன்களில் நாகரிகம் வந்தது போல தற்போது ஆபத்தான செல்பி எடுத்துப் பதிவிடுவதும் நாகரிகப்போக்காய் வளர்ந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஒரு படத்தினை எடுத்து அதனை பதிவேற்றம் செய்து மற்றவரின் லைக்கைப் பெறுவது என்பது தன்னம்பிக்கை மற்றும் சுய கவுரவத்தை கொடுப்பதாக மனரீதியாக நம்பப்படுகிறது. பொதுவாக செல்பி படத்தினைப் பதிவிடுவோரின் கூற்று தனது இருப்பை பதிவு செய்தலும் மற்றும் வெளிகாட்டலுமே செல்பியின் பணி என்று தொடங்கியது. இன்று வாழ்வில் தவிர்க்க இயலாத நடைமுறையாக ஆகியுள்ளது.

வளரும் செல்பி மோகத்தின் ஆபத்தினை உணர்ந்த அரசாங்கம் சில பகுதியில் செல்பி எடுக்கத்தடை விதித்து உள்ளது. தமிழக கோவில் கோபுரங்கள், ரெயில் நிலைய இருப்புப்பாதைகள், விமான ஓடு பாதைகள், அணைக்கட்டுப் பகுதிகள், அனல்மின் நிலையபகுதிகள், தேசிய நெடுஞ்சாலைத் திருப்பங்கள் போன்ற ஆபத்தான பகுதிகளில் செல்பி எனும் தாமி எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 15 இடங்களில் செல்பி படங்கள் எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது, இதுமட்டுமின்றி தற்போதைய மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அந்தந்த மாநில அரசிற்கு இது போன்று ஆபத்தான இடங்களில் எச்சரிக்கைப் பலகை வைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.டிக் டாக், ஷேர்சாட்டில் காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரையிலான ஒவ்வொரு செயலினையும் படத்துடன் பதிவேற்றம் செய்து பின்னணியாக திரைப்படத்தின் பாடலையும், வசனத்தையும் பதிவு செய்து லைக்கிற்காக ஏங்கிக் காத்து நிற்கிறது இன்றைய இளைஞர்கள் கூட்டம். இதுமட்டுமல்லாது லைக்கிடைக்க வில்லையே என்ற ஏக்கத்தின் விலைவாக தன் விலைமதிப்பில்லா தனது உயிரையும் மாய்த்துக்கொள்கின்ற பரிதாப நிலையும் இன்று பல இடங்களில் அரங்கேறுகிறது.

திரிலிங்கான படத்தினைப்போட்டு அதிக லைக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கும் முயற்சிகள் பல ஆபத்தில் போய் முடிகிறது. சமீபத்தில் புதுக்கோட்டையில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் செல்பி மோகத்தின் விளைவால் ரெயில் மோதி ஒருவர் உயிரிழந்த பரிதாப நிலையும் நாளேடுகள் வாயிலாக நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆபத்தான செல்பி படம் பதிவேற்ற மோகத்தின் விளைவாக இந்திய அளவில் இதுவரை 259-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து இருப்பதாக காவல்துறைக் கணக்கெடுப்பு கூறுகிறது.

ஒரு காலத்தில் பொழுதுபோக்கு என்பது தமது வேலை நேரம் போக எஞ்சி இருக்கும் நேரம் மட்டுமே ஆகும். ஆனால் இன்றைய நாகரிகச் சூழலில் முழு நேரமும் பொழுது போக்கிற்காக ஒதுக்கப்படுகிறது. தனது வாழ்க்கை நகர்வினைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இன்றைய இளம் வயதினர் கையில் ஒரு செல்போனுடன் பெரும் பொழுதினைக் கழிப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது. சினிமா பாடலுக்கு ஆடுவது, சினிமா வசனங்களுக்கு நடிப்பது, பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டி ஆடைகளின் அளவினைக் குறைத்துப் பதிவிட்டுக் கலாசாரச் சீரழிவினை ஏற்படுத்தும் போக்கும் இன்று பரவலாக காணப்படுகிறது.லைக் என்னும் விருப்பத்தினைப் பெரும் பொருட்டு லைப் என்னும் வாழ்க்கையை துச்சமாக என்னும் போக்கு வளர்ந்த வண்ணம் உள்ளது. ஒரு காலத்தில் தன்னையும் தன் அதீத செயலையும் காட்டிடும் வகையில் தலைகீழாக நடப்பது, தண்ணீரில் மிதப்பது, மரத்தின் உச்சியில் இருந்து குதிப்பது என்று சாகசம் செய்வது போய் இன்று வலைத்தள மோகத்தின் விளைவால் அழகான உயிரையும், வாழ்க்கையும் பெரிதாக எண்ணாமல் எடுக்கும் செல்பிகள் பெரும் ஆபத்தில் கொண்டு போய் விடுகிறது. இதனால் குடும்பமே பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

அடுத்தவர் விருப்பத்தினை பெருவதற்காக எடுக்கப்படும் படங்கள் ஒருபுறம் இருந்தாலும் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றை கேலியாக்கும் வகையில் எடுக்கப்படும் பதிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் சமூக ஆபத்தினை ஏற்படுத்துகிறது. லைக்கினை பெருவதற்காக தமது வீரத்தினை வெளிப்படுத்துகிறோம் என எண்ணிக் கொண்டு சமூக அமைதிக்கு ஆபத்தான செயல்களை பதிவிட்டு பின் சிறை தண்டணைக்கு உள்ளாகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது,

ஒரு காலத்தில் படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்று தவிர்த்த காலம் போய் இன்று பிறவி எடுத்ததே செல்பி எடுப்பதற்குத் தான் என்று என்னும் அளவிற்கு இந்தக் காலம் மாறியுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்னும் முதுமொழிக்கு ஏற்ப செல்போனில் செல்பிகளை அளவுடன் பதிவிட்டு மகிழ்வோம். லைக்கை விட லைப்பே உயர்வானது என்பதை உணர்வோம். அறிவியல் நல்ல சேவகன் ஆனால் கெட்ட எஜமானன் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker