இரவு தூக்கமும்.. உணவும்..
காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் இரவு உணவும் இன்றியமையாதது. அதனை காலதாமதமாக சாப்பிடுவதோ அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பதோ உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடும். செரிமான கோளாறு பிரச்சினைகளும் ஏற்படும். வேறுசில பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.
இரவில் தூங்கும்போதும் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரவில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு வகைகளையும் தவிர்த்துவிடுங்கள்.
காய்கறிகள், சூப், சாலட் வகைகளை இரவில் சாப்பிட வேண்டும். மஞ்சள், இஞ்சி, லவங்கப்பட்டை போன்ற மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் உட்கொள்ளலாம். அவை உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். இரவு உணவுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வதும் நல்லது. நார்ச்சத்து கொண்ட உணவுகளை இரவில் அதிகமாக சாப்பிடலாம்.
அதேவேளையில் பசியை உணரும்போதுதான் சாப்பிட வேண்டும். அதுவும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். பசி இல்லாமல் சாப்பிட்டால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு விடுவது நல்லது. ஏனெனில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுவதற்கு காலஅவகாசம் தேவை. சாப்பிட்ட உடனேயே தூங்கினால் செரிமான கோளாறு ஏற்படும். இரவு நேரத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.