மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
மகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.
இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு மிகப்பெரிய கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அவர்களிடத்தில் இல்லை. மகிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
சிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைப்பார்கள். சிலர் தங்களுக்கு வேண்டிய உடைமைகள், வீடு மற்றும் நகை போன்ற விஷயங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைப்பர். ஆனால் அது உண்மை அன்று. மகிழ்ச்சி என்பது வேறு. இதை நாம் சற்று அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.
மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல, நம் உடலில் உண்டாகும் சில மாற்றங்களும் ஆகும். மகிழ்ச்சியை உருவாக்க சில ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப் பொருட்கள் உடலில் உருவாக வேண்டும். இவை இயற்கையாக உருவாகாதபோது மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது பல பக்கவிளைவுகளை உருவாக்கும். இயற்கையாக உருவாகும் போது எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியைத் தானாக உருவாக்கும். இவற்றை இயற்கையாக நமது உடலில் உருவாக்க நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
என்டார்பின், செரோடோனின், டோபமைன், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்கள் மகிழ்ச்சியை உருவாக்கும்.
என்டார்பின் உடற்பயிற்சி செய்யும்போது, காதல் வயப்படும்போது உருவாகிறது. சிரிக்கும்போதும் இந்த வேதிப்பொருள் உடம்பில் உருவாகிறது. இதைத்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் பல காட்சிகளில் ‘சிரிப்பு வைத்தியம்’ என்று சுட்டிக் காட்டி இருப்பார்கள். இதைத்தான் திருவள்ளுவரும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்கிறார். என்டார்பின் உடலில் வலியை மறைக்கிறது. பற்றாக்குறை ஏற்படும்போது ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, கழுத்து வலி, கூட்டத்திலும் தனிமையாக உணர்தல் போன்றவை உண்டாகும். சாக்லெட்டை சுவைக்கும்போதும், நறுமணத்தை நுகரும்போதும் மிகுதியாக உடலில் இது உருவாகிறது.
டோபமைன், நாம் நமது குறிக்கோளை அடையும்போது உருவாகிறது. உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்த அப்பர் ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே குறிக்கோளுடன்தான் வாழ வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார். தன்னிச்சையாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போதும், தான தர்மம் செய்யும்போதும், நாம் பாராட்டப்படும்போதும் டோபமைன் உருவாகிறது. டோபமைன் குறைவு பார்க்கின்சன் நோயை உருவாக்கும், தாய்ப்பாலைத் தடை செய்யும். மேலும் டோபமைன் குறைவு ஊசலாடும் மனநிலையை ஏற்படுத்தும். தெளிவான முடிவு எடுப்பதில் குழப்பம் உண்டாகும். அதாவது மாறிமாறி முடிவெடுப்பவர்களுக்கும், நிலையான முடிவெடுக்கத் தெரியாதவர்களுக்கும் டோபமைன் குறைவாக உருவாகும். இதைத்தான் ‘மனம் ஒரு குரங்கு’ என்றும் சொல்வார்கள். வள்ளுவரும் தன்னுடைய குறளில்
‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு’
என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.
அவகாடோ, பிரக்கோலி, தக்காளி, புரதச்சத்து உள்ள உணவுகளில் டோபமைன் உள்ளது.
செரோடோனின், நம்மிடம் நேர்மறை எண்ணங்கள் உருவாகும்போதும் உருவாகிறது. மகிழ்ச்சியான மலரும் நினைவுகளில் மூழ்கும்போதும், தன்னம்பிக்கையோடு உள்ளபோதும், அடுத்தவர்களுக்கு உதவும் போதும், பாதுகாப்பாக உணரும்போதும் உருவாகிறது. சூரிய ஒளி அல்லது வெளிச்சமான இடம் போன்றவையும் செரோட்டனின் உருவாவதற்கு உதவும். சீஸ், முட்டை, அன்னாசிப் பழம், சால்மன் மீன்கள், உருளைக்கிழங்கு, பிரட், பருப்பு வகைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வதால் செரோடோனின் உருவாகும்.
ஆக்சிடோசின் ஹார்மோனை காதல் ஹார்மோன் எனவும் கூறலாம். கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளைத் தொட்டுப் பேசும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. நாம் ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும்பொழுது இந்த ஹார்மோன் சுரக்கிறது. இதனாலேயே கணவன், மனைவியிடம் நம்பிக்கை வைக்கும்பொழுது இந்த ஹார்மோன் உருவாகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. நண்பர்களை ஆரத்தழுவும்போதும் இந்த ஹார்மோன் சுரக்கிறது. மேலை நாடுகளில் கைக்குலுக்கி, கட்டிப்பிடித்து வரவேற்பார்கள்.
இதுவும் இந்த ஹார்மோன் சுரக்க உதவும். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்று பல காட்சிகளில் காட்டியிருப்பார்கள். இதுவும் அறிவியல் ரீதியாக மகிழ்ச்சியை உருவாக்கச் செய்யும் செயலாகும். எண்ணெய்த் தேய்த்து மசாஜ் செய்யும்போதும் இந்த ஹார்மோன் உருவாகிறது. குற்றாலத்தில் எண்ணெய்க் குளியல் கூட ஆக்சிடோசின் உருவாக உதவுகிறது. அந்தக் காலத்தில் ‘சனி நீராடு’ என்ற பழமொழியை ஆராயும்போது ஆக்சிடோசின் பற்றி அன்றே சிந்தித்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும்போதும் இந்த ஹார்மோன் சுரக்கும். வாழைப்பழம், முட்டை, மிளகு போன்ற உணவுகளில் ஆக்சிடோசின் நிரம்ப உள்ளது.
மகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.