ஆரோக்கியம்

மாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம்

மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது.

மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கும் மருத்துவர் மாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரக் குறிப்புகளை பட்டியலிடுகிறார்.

* இப்போது டாம்பூன்கள், சானிட்டரி நாப்கின்கள், மென்சுரல் கப்கள் என பல வழிகள் பெண்களுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். உதிரப்போக்கின் அளவுக்கு தகுந்தவாறும், உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றில் நாப்கின்தான் சிறந்தது. டாம்பூன் (Tampoon)உபயோகிப்பவர்களுக்கு Toxic Shock Syndrome ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.

* சிலர் நாப்கின் நனையாதவரை மாற்ற மாட்டார்கள். அப்படிச் செய்வது தவறு. உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும், நாப்கின் நனையாவிட்டாலும்கூட 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், ஒருமுறை உடலிலிருந்து வெளியேறி ஏற்கனவே நாப்கினில் படிந்திருக்கும் உதிரம் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும்.

இதனால் சிறுநீரகப்பாதைத் தொற்று, பிறப்புறுப்பில் அழற்சி, தொற்றுகள் ஏற்படலாம். பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் இடைவேளைகளிலோ, சாப்பாட்டு நேரத்திலோ சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களும் மறக்காமல் இதை பின்பற்றவேண்டும்.

* முழுவதும் நனைந்த நாப்கின்களை மாற்றாமல் இருப்பதால், சில பெண்களுக்கு தொடைப்பகுதியில் சிராய்ப்புகள் தோன்றும். இதை Pad rash என்று சொல்கிறோம். தொடை இடுக்குகளில் நனைந்த பேடுகள் உராசுவதால் இது வருகிறது. அதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி Pad Rash வந்தால் அதற்கு ஆன்ட்டிசெப்டிக் ஆயின்மென்ட் தடவிக் கொள்ளலாம்.

* மாதவிடாய் நேரங்களில் உதிரத்துளிகள் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அதை சரியாக சுத்தம் செய்யாவிடில் துர்நாற்றம் வீசும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும்போதும் சுத்தமான தண்ணீராலோ, அல்லது ஈரப்பதமுள்ள டிஷ்யூ பேப்பராலோ துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

* இயற்கையிலேயே பெண்ணின் பிறப்புறுப்புக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. அதனால் சோப்புத் தண்ணீரால் பிறப்புறுப்பு உட்பகுதியை கழுவ வேண்டியதில்லை. சோப்பு நீர் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். வெளிப்புறப் பகுதிகளை வேண்டுமானால் சோப்பு நீரால் சுத்தப்படுத்தலாம். அவ்வாறு சுத்தம் செய்யும்போது ஈரப்பதம் உள்ள டிஷ்யூ பேப்பரால் யோனியிலிருந்து கீழ்ப்புறமாக மலவாய் வரை துடைக்க வேண்டும். கீழிருந்து மேலாக துடைப்பதால் மலவாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு.

* இன்றளவும்கூட மாதவிடாய் நாட்களில் குளிக்கக்கூடாது என்று ஒரு தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. அது தவறான நம்பிக்கை. கண்டிப்பாக காலை, மாலை இருவேளையும் தவறாமல் குளிக்க வேண்டும்.

* ஏதாவது ஒரு முறையை, ஒரு பிராண்டை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். சிலர் இந்த மாதம் ஒரு பிராண்டு, அடுத்த மாதம் ஒரு பிராண்டு. இன்று நாப்கின், நாளை டாம்பூன் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பார்கள். இது சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்பதால் தனக்கு எந்த வகையான முறை ஒத்துக் கொள்கிறதோ அதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது. இப்போது இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களும் சந்தையில் வந்துவிட்டது என்பதால் முடிந்தவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கலாம்.

* இறுதியாக நமக்கு எத்தனை நாட்களில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சுழற்சி சரியாக வருபவர்கள் 20-வது நாள் தொடங்கி கைப்பையில் தயாராக நாப்கினை வைத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு இருப்பவர்கள் எப்போதுமே கைவசம் நாப்கினை வைத்திருப்பது நல்லது. இதனால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாமே. அதேபோல் கைப்பையில், சானிடைசர், பேப்பர் டவல், துணி டவல், தண்ணீர் பாட்டில், ஆன்ட்டிசெப்டிக் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker