சிறுநீரக பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்
சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது அவசியம். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டபின் அதனை குணப்படுத்துவது கடினம்.
சிறுநீரகங்கள் என்பது முதுகெலும்பு பகுதியில் உடலின் வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். நெடுநாட்பட்ட சிறுநீரகக்கோளாறு என்பது சிறுநீரகத்தின் முக்கியமான தொழிலான நீரில் கரையக்கூடிய கழிவுப்பொருள்களை குருதியிலிருந்து வடித்தெடுத்து வெளியேற்றும் செயல்பாடு சிறிது சிறிதாக குறைந்து நெடுநாட்களுக்குப்பின் சிறுநீரகத்தின் முழுமையான செயல்திறனும் குறைவதாகும்.
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்
குருதியில் அமில-கார நிலையை சமபடுத்துகிறது. குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது. குருதியில் உள்ள யூரியா மற்றும் கிரியாடினைன் என்னும் கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவு கின்றது. எரித்ரோபோய்டின், ரெனின், கால் சிடிரால் என்னும் ஹார்மோனை உற்பத்திச் செய்கிறது. அதாவது தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடி கட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்புகிறது. தேவைக்கு அதிகமான உப்புகளையும், தாது களையும் பிரிக்கிறது.
இந்தியாவில் ஏறக்குறைய 30 சதவீதம் பேர் சிறுநீர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்வது அவசியம், நம் உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1.5 மி.லி முதல் 2.5 மி.லி வரை சிறுநீர் பிரிகிறது. சிறுநீரகத்தின் தொழில்கள் பாதிப்பு ஏற்படும் போது சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும் போது முற்றிலும் சிறுநீரகத்தின் செயல் பாதிப்படைகின்றது.
காரணங்கள்
தேவையான அளவு நீர் அருந்தாமை. உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக்கொள்ளுதல். அதிக சக்திவாய்ந்த மாத்திரைகள் அதிக நாட்களாக தொடர்ந்து உட் கொள்வதாலும், மருத்து வரின் ஆலோச னையின்றி தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதாலும், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவு உட்கொண்டவர்களுக்கும் ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் உடையவர்களுக்கும், நாட் பட்ட சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்தநோய் இருந்து அதற்கான மருந்துகளை அதிக நாட்கள் தொடர்ந்து உட்கொண்டவர்களுக்கும், அடிக்கடி சிறுநீர்பாதையில் தொற்றுகள், சிறு நீரகக்கற்கள் உடையவர்களுக்கும், சிறு நீரக கட்டிகள் உடையவர்களுக்கும், சிறு நீரகத்தின் வடிகட்டுதல் செயல்திறன் குறைந்தவர்களுக்கும், சிறுநீரக காசநோய் உடையவர்க்கும் இதய கோளாறு உள்ளவர்களுக்கும், அதிகரித்த உடல்எடை உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்களுக்கும், கார்டிசோல், ரெனின் மற்றும் ஆல்டோஸ்டீரான் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கும், தன்னெதிர் தாக்குதல் நோய் உள்ளவர்களுக்கு அதாவது சிஸ்டமிக் லூபஸ் எரித்ரோமேட்டஸ், ருமாடிக் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கும். கர்ப்பிணிகள் தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதால் அதனை தொடர்ந்து கன்ஜெனிடல் சிறுநீரகங்கள் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், நெப்ரோடிக் சின்ட்ரோம் நோயினை தொடர்ந்தும் நாட் பட்ட சிறுநீரகங்களின் கோளாறுகள் உண்டாகின்றது.
இந்த காரணங்களை சரிசெய்வதின் மூலம் நெடுநாட்பட்ட சிறுநீரகங்களின் கோளாறுகளை தவிர்க்க முடியும்.
குறி-குணங்கள்
சிறுநீரக நோயின் முதல் அறிகுறி சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற விதத்திலும் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் அளவு கூடுதலாகவோ (அ) குறைவாகவோ இருக்கலாம். சிறுநீரில் புரதம் அல்லது ரத்தம் காணல். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகுறைதல்.
உடலில் வீக்கம் காணல்:–கைகள், கால்கள், முகம் இவ்விடங்களில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகத்தின் செயல்திறன் குறைவதால் நீர்த்தன்மை அதிகரித்து உடலில் வீக்கம் உண்டாகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் மூளைக்குச்செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து மயக்க உணர்வு ஏற்படும்.
ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்கள் குவிந்து கொண்டே செல்வதால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும். ரத்த அழுத்தம் அதி கரித்துக்காணும். தூக்கமின்மை உண்டாகும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிதல் ஏற்படும். நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடுவதால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்துவிடுவதால் வெளிவிடும் மூச்சுக்காற்றில் கெட்ட வாடை வீசும்.
ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடினைன் என்னும் கழிவுகள் குவிவதால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும். சிறுநீரகமானது எரித்ரொபொய்டின் என்னும் ஹார்மோனை சுரப்பிக்கச் செய்கிறது. இது ரத்தச் சிவப்பணுக்களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். எரித்ரொபொய்டின் ஹார்மோன் அளவு குறைவதால் ரத்த சிவப்பணுக்களும் குறைந்து ரத்த சோகை ஏற்படும்.
சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது அவசியம். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டபின் அதனை குணப்படுத்துவது கடினம்.
நெடுநாட்பட்ட சிறுநீரக நோய் நிலை
நிலை-1:-சிறுநீரக பாதிப்புடன் கூடிய இயல் பான சிறுநீரக செயல்பாடு.
நிலை-2:- சிறிதளவு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு
நிலை-3:- சிறிதளவு கொஞ்சம் தீவிரமான சிறுநீரகச் செயல்பாடு
நிலை-4:- மிகத்தீவிரமான சிறுநீரக பாதிப்பு
நிலை-5:-மிகமிகத் தீவிரமான சிறுநீரக பாதிப்பு சிறுநீரகங்கள் கோளாறு அடைந்த நிலை.
சிறுநீரகங்கள் டயாலிசிஸ் (அ) டிரான்ஸ் பிளான்டேஷன் செய்யக்கூடிய நிலை.
நோய்கணிப்பு:
ரத்தப்பரிசோதனை: யூரியா மற்றும் கிரியாடினைன் அளவு அதிகரித்தல். ஹீமோகுளோபின் அளவு குறைதல். சிறுநீரில் புரதம் (அ) ரத்தம் கலந்து காணல். சிறு நீரகங்கள் வடிவம், சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலை.
டயாலிசிஸ்
சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறு நீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. அதாவது நெடுநாட்பட்ட சிறுநீரக கோளாறுகளில் நிலை 4, நிலை 5, முறைகளில் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகின்றது. சிறு நீரகங்கள் உடல் நலனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இருக்கும் போது சிறு நீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களின் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம், பாஸ் பரஸ், மக்னீசியம்) போன்றவற்றை சமநிலைப் படுத்துகின்றது.
மேலும் சிறுநீரகமானது எரித்ரொபொயட்டின் மற்றும் 1,25- டைஹைட்ராக்சிகோல் கால்சிபெரால் ஆகியவற்றை உருவாக்குகின்றது. எரித்ரொபொயட்டின்-ரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. கால்சிட்ரோல்- எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. டயாலிசிஸ் 2 வகைப்படும் அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்.
கவனத்திற்கு
நெடுநாட்பட்ட சிறுநீரக கோளாறு உடைய வர்களின் முக்கிய கவனத்திற்கு:-
முக்கியமாக உணவில் உப்பினை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு மட்டுமே நீர்பருக வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூக்கிரட்டை கீரை இலைச்சாறு 100மி.லி, துத்திவேர் 20 கிராம், கருஞ்சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இத்துடன் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் இதனை அரை டம்ளராக வற்றவைக்கவும். அதாவது 60 மி.லி. குடிநீர் காலை மற்றும் மாலை இருவேளை தொடர்ந்து குடித்துவர யூரியா மற்றும் கிரியாடினைன் அளவை எளிமையாக குறைக்கலாம்.
தாகம் ஏற்பட்டால் மட்டுமே குடிநீர் பருக வேண்டும். தேவையான அளவு மட்டுமே குடிநீர் பருகுவது நல்லது.
நாம் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டிய சோடியத்தின் அளவு மிகவும் முக்கியமாகக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
தீவிரமாக நெடுநாள்பட்ட சிறுநீரகநோய் உடையவர்களுக்கு சிறுநீரகங்களால் சோடியத்தை வடிகட்ட முடியாமல் இருக்கும். நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். உப்புச்சத்து உள்ள உணவுபொருள்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
சேர்க்க வேண்டிய உணவுப்பொருள்:
மக்காச்சோளம், கோதுமை, பார்லி, அரிசி வகைகள், பச்சைபயறு, துவரம்பருப்பு, முட்டைகோஸ், காலிபிளவர், குடைமிளகாய், வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சிறுகீரை, கொத்தமல்லி, பாகற்காய், கொடை மிளகாய், திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசிப்பழம், தரப்பூசணி, பப்பாளி, மாதுளைபழம், செர்ரி, எலுமிச்சைபழம், அக்ரோட்டு, முட்டைவெள்ளைக்கரு, கொழுப்புநீக்கப்பட்ட பால்பொருட்கள்.
தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:
கத்தரிக்காய், வெந்தயம், கடுகு, பீட்ரூட், சிறுதானியங்கள், தேங்காய், இளநீர், வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, சப்போட்டா, கொய்யா, வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, உலர்திராட்சை, பேரீச்சைபழம், மீன், கோழி, ஆட்டுக்கறி, வெண்ணெய், நெய், உளுந்து, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பால் பொருட்கள்.