கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை
கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.
* கூந்தல் நுனி வெடிப்புக்கு ஆலிவ் ஆயில் மிகவும் ஏற்றது. இத்தாலியன் ஆலிவ் ஆயில் அல்லது கிரீன் ஆலிவ் ஆயில் எனக் கிடைக்கிறது. அதில் ஈரப்பதம் அதிகம். வைட்டமின் இ, இரும்புச் சத்து போன்றவையும் உள்ளதால் கூந்தலுக்கு ஏற்றது.
சிறிதளவு ஆலிவ் ஆயிலை எடுத்து, வெந்நீர் உள்ள பாத்திரத்தில் வைத்து லேசாக சூடாக்கவும். நேரடியாக சூடாக்கக் கூடாது. அந்த எண்ணெயில் பஞ்சை முக்கி, கூந்தலில் வெடிப்புகள் உள்ள இடங்களிலும், கூந்தலின் மேலும் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் சுற்றிக் கட்டவும். சூடு ஆறும் வரை சில முறைகள் அப்படியே செய்யவும். பிறகு மிதமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் உபயோகித்து கூந்தலை அலசவும்.
* பிளவுபட்ட முடியை மறுபடி ஒட்ட வைக்க முடியாது. ஓரங்களில் பிளவுபட்டிருந்தால் அதை லேசாக ‘ட்ரிம்’ செய்து விட்டு, பிறகு கண்டிஷனரை பயன்படுத்துவது சிறந்தது.
* சிலருக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஹேர் டை உபயோகிப்பதாலும், கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்வதாலும், ஹேர் டிரையர் உபயோகிப்பதாலும் கூட முடி வலுவிழந்து உடையும். அவர்கள் ஒரு முழு முட்டையுடன், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவவும்.
மிதமாக மசாஜ் செய்யவும். வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றி வைத்திருந்து, 3 நிமிடங்கள் கழித்து எடுக்கவும். இதையே நான்கைந்து முறைகள் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவால் அலசவும்.
* வெந்தயம், காய்ந்த நெல்லிக்காய் இரண்டையும் தலா 2 டீஸ்பூன் எடுத்து முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் விழுதாக அரைத்து, சிறிது தயிரில் கலந்து கொள்ளவும். தலையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு, அதன் மேல் இந்த விழுதைத் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து பின் அலசவும்.
* நன்கு பழுத்த பப்பாளியை தோல், விதை நீக்கி மசித்து 2 டீஸ்பூன் விழுது எடுத்துக் கொள்ளவும். அதில் சம அளவு தயிர் சேர்த்துக் குழைக்கவும். அதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து அலசவும். இது நுனி வெடிப்புக்கு மிக அருமையான சிகிச்சை.
* ஒரு டீஸ்பூன் பாலாடையை, சிறிது பால் விட்டு அடிக்கவும். அதை கூந்தல் முழுக்கத் தடவி, 15 நிமிடங்கள் கழித்து அலசவும்.
* அரை கப் கருப்பு உளுந்தை நைசாக பொடிக்கவும். அதில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியும், 1 கப் தயிரும் சேர்த்துக் குழைக்கவும். இந்தக் கலவையைத் தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து நிறைய தண்ணீர் விட்டு நன்கு அலசவும்.
* வைட்டமின் இ கேப்ஸ்யூல் 2 எடுத்து உடைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, வெடித்த கூந்தல் பகுதிகளின் மேல் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம்.
சிலருக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஹேர் டை உபயோகிப்பதாலும், கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்வதாலும், ஹேர் டிரையர் உபயோகிப்பதாலும்கூட முடி வலுவிழந்து உடையும்.