வெற்றியின் முதல்படி
‘வெற்றி‘ என்னும் மூன்றெழுத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு ‘தோல்வி‘ என்னும் மூற்றெழுத்தை கடந்தாக வேண்டும். ஆனால், தோல்வியை மட்டும் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அனுபவம், ஒரு சிறந்த ஆசிரியர் என்பது நாம் அறிந்ததே.
ஒவ்வொரு சாதனையாளரின் வாழ்க்கை புத்தகத்தை புரட்டி பாருங்கள். அவர்கள் கடந்து வந்த பாதை எவ்வளவு தோல்வி, அவமானங்கள் கொண்டது என்பது புரியும். தோல்வியில் அடிபட்டால் உடனே எழுந்து விடு, இல்லையேல் இவ்வுலகம் உன்னை புதைத்து விடும் என்பது விவேகானந்தரின் வாக்கு.
தோல்வி அடையாத மனிதனே கிடையாது. தோல்வியில் அடிபட்டு எழாதவன் மனிதனே கிடையாது. முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலை செய்யும் தொடங்கும்போது தடைகள், தோல்விகள் வரக்கூடும். ஆனால், எதையும் எதிர்கொண்டு செய்யும் செயலில் நாம் ஈடுபட வேண்டும்.
எதற்கும் கவலைப்படாமல் நம் வாழ்க்கையில் வெற்றி பெற போராட வேண்டும். அன்று தாமஸ் ஆல்வா எடிசன் பல முறை தோல்வி அடைந்து விட்டதே என்று நினைத்திருந்தால் இன்று நமக்கு மின்சாரம் கிடைத்திருக்காது. எனவே, தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்று நினைத்து வாழ்வோம், வாழ முயற்சிப்போம்.