சமையல் அறையில் ஒளிந்துள்ள கொசு, ஈ போன்ற பல பூச்சிகளை உடனே ஒழிக்க 9 வழிகள் இதோ…
உயிர் வாழ மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது. அதே சமயத்தில் அதன் தரம் மிக முக்கியமானதாகும். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகையின் தன்மை தான் நமக்கு தெரியாது. ஆனால், வீடுகளில் நாம் தயாரிக்கும் உணவுகளிலும் இதே பிரச்சினை இருந்தால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.
குறிப்பாக சமையல் அறையில் உள்ள பூச்சிகளினால் நமது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சமையல் அறையில் நமக்கு அறிந்தும் அறியாமலும் பல வித பூச்சிகள் ஒளிந்துள்ளன. சில பூச்சிகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது. எனினும் சில வகையான பூச்சிகள் உணவில் உட்கார்ந்தாலோ அல்லது அதன் எச்சம் உணவில் பட்டாலோ மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். இந்த வகையான பூச்சிகளை சமையல் அறையில் இருந்து ஒழிக்க வழி தெரியாமல் திணறிக்கிறீர்களா? இனி இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
பாதிப்பு பொதுவாக சமைக்கும் இடம் மிகவும் சுத்தமாக இருத்தல் வேண்டும். கொசு, ஈ போன்ற பூச்சிகள் உணவு தயாரிக்கும் இடத்தில் இருந்தால் அவற்றால் நமக்கு பாதிப்புகள் தான் அதிகம். இதனால் வயிற்று போக்கு, வாந்தி, பேதி, மயக்கம், தலை வலி, சில சமயங்களில் மரணம் கூட நேரலாம்.
உப்பும் மஞ்சளும்
உங்கள் சமையல் அறையின் மூலை முடுக்குகளில் மஞ்சள் மற்றும் உப்பை கலந்து தூவி விடுங்கள். இதன் கிருமி நாசினி தன்மை இந்த பூச்சிகளை முற்றிலுமாக அழித்து விடும். மேலும், உணவுகளை பாதுகாப்பாக வைக்கும் இடங்களிலும் இந்த கலவையை தூவி விடுங்கள். இது நல்ல தீர்வை தரும்.
மிளகும் உப்பும்
சமையல் அறையில் அதிக அளவில் கொசு, ஈ, மற்றும் பல வித பூச்சிகளின் தொல்லை தாங்க முடியவில்லையா? இதை மிக சுலபமாக உப்பு மற்றும் மிளகை வைத்து சரி செய்து விடலாம்.
2 கப் கொதிக்க வைத்த நீரில் உப்பு மற்றும் மிளகு பொடியை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை ஸ்பிரே செய்வது போல பூச்சிகள் இருக்கும் இடத்தில் செய்து வந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடலாம்.
ஆரஞ்சு தோல்
கொசு மற்றும் ஈக்களினால் சமையல் அறையில் மோசமான பாதிப்பு உள்ளதா? அதற்கு சிறந்த தீர்வை ஆரஞ்சு தோல் தருகிறது. ஒரு மெல்லிய துணிக்குள் ஆரஞ்சு தோலை வைத்து, சமையல் அறையில் கட்டி தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்தால் இந்த வகை பூச்சிகளினால் தொல்லை நீங்கும்.
இஞ்சி
உடல் நலத்தோடு சேர்த்து வீட்டின் நலத்தையும் இஞ்சி பாதுகாக்கிறது. 1 ஸ்பூன் சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து அதை பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்தால் மிக எளிதாக அவற்றை அழித்து விடலாம்.
வினிகர்
சமையல் அறையில் ஒளிந்துள்ள பூச்சிகளை கொல்ல இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு 2 கப் வினிகரை 1 ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளவும். அடுத்து இதனை 1 கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையின் எல்லா மூலைகளிலும் ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகளை விரட்டி விடலாம்.
இலவங்கம்
ஆப்பிளை அரிந்து அதன் பாதி பகுதியை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு இதில் இலவங்கத்தை சொருகி பூச்சிகள் இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பூச்சிகள் அழிந்து விடும்.
எலுமிச்சை புல்
ஒரு சிறிய பாத்திரத்தில் எலுமிச்சை புல் எண்ணெய்யை ஊற்றி சமையல் அறையில் ஒரு ஓரமாக வைத்து விடவும். இதே போல ஓரிரு இடங்களில் வைத்தால் பூச்சிகள், கொசு, ஈ போன்றவை சாகும்.
துளசி
வீட்டின் முற்றத்தில் இருந்து எப்படி நமது முழு வீடையும் துளசி பாதுகாக்கிறதோ அதே போன்று நமது சமையல் அறையில் வைத்தால் நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதுகாக்கும். சமையல் அறையில் ஒரு துளசி செடியை சிறிய தொட்டியில் வளர்த்தால் பூச்சிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகள் குறையும்.