ஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்
சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.
இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊதுபத்தி வாசத்தை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. கர்ப்பிணி பெண்கள் நுகரும்போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊதுபத்தியில் இருந்து வெளியேறும் புகை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும்.
ஊதுபத்தி பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்னும் பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே உபயோகிப்பது நல்லது. நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.