ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்

அரிப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.






குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.






அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.






உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker