ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

அல்சர் வரக்காரணமும் – தவிர்க்க வேண்டியவையும்

அல்சர் வரக்காரணமும் - தவிர்க்க வேண்டியவையும்

உணவுப் பழக்கத்தையும், வாழ்வியல் முறையையும் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனை அல்சர். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதால், பலரும் வயிற்றுப் புண் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

அல்சர் என்றால்…

அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.

* இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம்.
* உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது.
* சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம்.






காரணங்கள் என்னென்ன?

பாக்டீரியா தொற்று (Helicobacter pylori)
மன உளைச்சல்
அதீத கவலை
தவறான உணவுப் பழக்கம்
சில வகை மருந்துகளை உட்கொள்வது
அதிகமாகக் காபி குடிப்பது
மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது  போன்ற பல்வேறு காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

* காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

* பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது.

* சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம்.






* ரெட் மீட்டை உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.

* தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம்.

* முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம்.

* ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.

* கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.

* அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.






* வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.

* மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

* பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.

* முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker