இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.
உடல்ரீதியாக பார்த்தால் ஆண்கள் அதிக காலம் இளமையாக இருப்பார்கள். பெண்கள் பிரசவத்திற்கு பிறகு இளமைப் பொலிவை சற்று இழக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் உடற்கட்டு குலையும். ஆகவே நிகரான ஜோடியாக திகழ மனைவி, கணவரைவிட வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்றார்கள். ‘பெண்கள் குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மையடையவேண்டும். ஆண்களுக்கு அப்படி எந்த வரம்பும் இல்லை. அதனால்தான் பெண்ணுக்கு, ஆணைவிட குறைந்த வயதிலே திருமணம் செய்துவைக்கப்படுகிறது’ என்ற கருத்தும் உண்டு.
இப்படி சொல்லப்பட்ட காரணங்களை எல்லாம் இன்றைய சமூகம் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டது. இப்போது வயது ஒரு பொருட்டில்லை. தன்னை விட வயதில் மூத்த பெண்ணாக இருந்தாலும் விரும்பி மனம் ஒத்து திருமணம் செய்துகொண்டு ஆண்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.
காலம் மாறிவிட்டது. அதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன. காலத்திற்கேற்ப மனிதர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.