பழங்களை சாப்பிடுவதில் வரைமுறை
காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்த சமயத்தில் செரிமான செயல்பாடு சீராக இயங்கும். பழங்களில் உள்ள அனைத்து சத்துக்களை யும் உறிஞ்சு எடுத்துக்கொள்ள உடல் ஒத்துழைக்கும்.
மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடுவது எடை குறைப்புக்கு வழிவகுக்கும். எளிதாக செரிமானம் நடைபெறவும் உதவி புரியும். முலாம் பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், மாம்பழம், பெர்ரி வகை பழங்களை அப்போது சாப்பிடலாம். மதிய சாப்பாட்டுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்கள் சாப்பிட வேண்டும் என்பது அவசியம்.
வேலைக்கு செல்வதற்கு முன்பும், வேலை முடிந்த பின்பும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அது சோர்வின்றி உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு பக்கபலமாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இரவு சாப்பாட்டுக்கு முன்பு பழங்கள் சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்துக்கள் பசியின் வீரியத்தை குறைக்கும்.
சாப்பிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ, தூங்க செல்வதற்கு முன்போ பழங்கள் சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்படும். பழங்களில் இருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.
உணவுடன் சேர்த்து பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அப்படி செய்வது செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
அந்தந்த பருவகாலங்களில் விளையும் பழங்கள் உடலுக்கு ஏற்றது.
சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் பொட்டாசியம் அளவு குறைவாக உள்ள பப்பாளி, ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். அதுவும் டாக்டரின் ஆலோசனை பெற்றே சாப்பிட வேண்டும்.