ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

வயிற்று கோளாறுகளை உண்டாக்கும் சர்க்கரை நோய்

வயிற்று கோளாறுகளை உண்டாக்கும் சர்க்கரை நோய்

இதயநோய், பக்கவாதம், மாரடைப்பு என்ற பல்வேறு தொற்ற நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பது சர்க்கரை நோய். சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரை நோய், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிடும். சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் அவ்வளவு எளிதில் ஆறாது. பார்வையும் கூட பாதிக்கப்படும். இதெல்லாம் எல்லோரும் அறிந்தது தான்.






ஆனால், சர்க்கரை நோய் வயிற்றையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. வயிற்றுக் கோளாறுகள் ஏற்படச் சர்க்கரை நோயும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இதுபற்றி விழிப்புஉணர்வு இல்லாததால், வயிற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருந்தகத்தில் மாத்திரை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். சர்க்கரை நோயால் என்ன மாதிரியான வயிற்று பிரச்னைகள் ஏற்படும், அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு விதமான வயிற்றுபிரச்சனைகள் வரலாம். ஒன்று ‘டயாபடிக் கேஸ்ட்ரோபேரசிஸ்’ (Diabetic Gastroparesis) என்ற பிரச்சனை ஏற்படலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, அது வேகஸ் நரம்புகளைப் பாதிக்கும். இரைப்பையில், ‘எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம்’, ‘எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும்’ என்பதையெல்லாம் தீர்மானிப்பதும் செரிமானப் பணிகளை ஒழுங்குபடுத்துவதும் இந்த நரம்புகள்தான். இவற்றில் பாதிப்பு ஏற்படும்போது, அஜீரணக் கோளாறுகள், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வீக்கம், மேல் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

மற்றொரு பிரச்சனை, ‘இன்டெஸ்டினல் எண்ட்ரோபதி’ (Intestinal Enteropathy). இந்தப் பிரச்சனையும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காத நிலையில்தான் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும். சில நேரங்களில் இரண்டு பிரச்சனைகளும் மாறிமாறி வரலாம்.

தீர்வு என்ன?

வயிற்று உபாதைகளால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் பயன்தராது. அவற்றிலிருந்து விடுபட வேறுசில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.






* திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* மூன்று வேளைச் சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடலாம்.

* மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களைக் கைவிடவேண்டும்.

* அரிசி போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவைக் குறைத்து நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.






* ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியுடன் மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளவேண்டும்.

இவற்றைப் பின்பற்றுவதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்தால் மட்டுமே, அது நிரந்தர தீர்வாக அமையும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker