ஆரோக்கியம்புதியவை

ஞாபகமறதி வியாதியால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்

ஞாபகமறதி வியாதியால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்

‘அல்சைமர்’ எனப்படும் ஞாபகமறதி வியாதி, ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடிய அல்சைமர் நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் வேகமாக உயர்ந்து வருகிறது.

வருகிற 2030-ம் ஆண்டில் உலகெங்கும் அல்சைமருடன் வாழ்பவர்கள் எண்ணிக்கை ஏழரைக் கோடியாக உயரும் என்றும், 2050-ல் அது 13 கோடியே 15 லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அல்சைமர் தொடர்பான பிரச்சினைகளால் இறப்பவர்களில் மூன்றில் இருவர் பெண்கள்.


அமெரிக்காவிலும் அல்சைமர் பாதிப்புகளுடன் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் மூவரில் இருவர் பெண்கள். பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால் சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்சைமரே பெண்களை அதிகம் பாதித்திருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கப் பெண்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரை விட அல்சைமரால் பாதிக்கப்படுவோர் இரு மடங்கு அதிகம். 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பிரிவில் அதிகம் பேரை பலிவாங்கும் நோயாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியாவில் இதய நோயைப் பின்னுக்குத் தள்ளி பெண்களிடையே அதிகளவில் இறப்புக்குக் காரணமான நோயாக அல்சைமர் திகழ்கிறது. இதன் எண்ணிக்கை மிகப்பெரிதாக உள்ளது. இதை தற்போதைய மருத்துவ நடைமுறைகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார், அன்டோநெல்லா சன்ட்கின்சாதா.

இவர் சுவிட்சர்லாந்தில் அல்சைமர் சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறு நிபுணராகவும் உள்ளார். பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதால் இதில் விரிவான ஆய்வு அவசியம் என்கிறார் இவர். அல்சைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. வயது ஏற ஏற அல்சைமர் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.


பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்சைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இங்கிலாந்தில் கடந்த 20 ஆண்டுகளில் புதிதாக அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே அல்சைமர் வருவது குறைந்தது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். இதய நோய்கள், புகைப்பிடித்தல் பற்றி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களே இதற்குக் காரணம். மேற்கண்ட இரண்டும்தான், அல்சைமரை ஏற்படுத்துவதற்கான முக்கியக் காரணிகளாகும். பெண்களிடையே மனஅழுத்தப் பிரச்சினை இருக்கும் நிலையில் அது அல்சைமருக்கு வழி வகுக்கிறது.

பிரசவ கால சிக்கல்கள், மாத விடாயை அறுவைசிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்சைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள், காரணிகளும் அல்சைமருக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்சைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என ஆரோக்கிய உடற்கூறியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் கூறுகிறார். அமெரிக்காவில் இது போன்று இருப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற தகவல்கள் பாலின அடிப்படையில் நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உதவும் என்கிறார் மரியா தெரசா பெரட்டி. ஜூரிச் பல்கலைக்கழகத்தில் அல்சைமர் குறித்து ஆய்வு செய்து வரும் மருத்துவ ஆராய்ச்சியாளர் இவர். இந்த யோசனை வேகமாக செயல்வடிவம் பெற்றுவருகிறது.


பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்சைமர் குறித்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் அல்சைமருக்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அல்சைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் காணப்படும் மன ரீதியான வெளிப்பாடுகள், அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுகிறது என்கிறது இந்த ஆலோசனைக் குழு. இவற்றைக் கொண்டு அல்சைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.

மூளையில் சேர்ந்துள்ள இரு வகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்சைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. அல்சைமரால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை. ஆனால் அல்சைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வருகிறது.


ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என ஆராயப்பட வேண்டியுள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker