உலக நடப்புகள்புதியவை

நேர்முகத் தேர்வில் நிகழும் தவறுகளை திருத்தி, வெல்வது எப்படி?

நேர்முகத் தேர்வில் நிகழும் தவறுகளை திருத்தி, வெல்வது எப்படி?

நேர்முகத்தேர்வு வாழ்வின் அடுத்த அத்தியாயத்தின் வாசல் கதவு. முறையான புரிதலுடன் நேர்முகத்தேர்வை அணுகுபவர்களுக்கு மட்டுமே அந்தக் கதவு திறந்து வாழ்வில் புதிய வழி பிறக்கிறது. வேலையில் சேர கனவுகளோடு காத்திருக்கும் பலருக்கும் நேர்முகத்தேர்வு என்றாலே சிறிது அச்சமும், பதற்றமும் இருக்கலாம். சரியாக திட்டமிடாததால் நேர்முகத் தேர்வில் கோட்டை விட்டவர்கள் பலர் உண்டு. நேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன? அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி? என்பது பற்றி இங்கு காண்போம்…

பணி, பணியிடம் பற்றி அறியாதிருத்தல்:

நேர்முகத் தேர்விற்கு செல்லும் பலரும் கண்டுகொள்ளாத மிக முக்கியமான விஷயம் இது. தாங்கள் செல்லும் அலுவலகம் மற்றும் பணி பற்றிய தகவல்கள் ஏதும் அறியாமல் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வது பலரது வாடிக்கை. இப்படிச் சென்றால் மேலாளர் உங்களுக்கு பணியின் மீது ஆர்வம் இல்லை என்று எண்ணக் கூடும். எனவே பணி, பணியிடம் என அலுவலகம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது மேலாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உதவும்.



தாமதமாக செல்லுதல்:

சிலருக்கு, இது சாதாரணமான விஷயமாக தெரியலாம். ஆனால் நீங்கள் காலத்தின் முக்கியத்தை எந்த அளவிற்கு உணர்ந்து செயல்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு மேலாளரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்க்க உதவும். எனவே நேர்முகத்தேர்வுக்கு தயாராகும் போதே தேர்விற்கு செல்லும் இடம், போக்குவரத்து, புறப்படும் நேரம் என எல்லாவற்றையும் குறித்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே அங்கு இருப்பதற்கு ஏற்ற வகையில் விவேகமாக செயல்படுங்கள். ஏனெனில் உங்கள் எதிர்கால பயணத்திற்கு ‘டிராபிக்’ ஒரு தடையாகி விடக்கூடாது.

மிடுக்கான உடை:

நேர்முகத்தேர்வை பொறுத்தமட்டில் ஆடையின் பங்கு என்பது மிக முக்கியமானது. பார்த்தவுடன் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவது உங்கள் உடைதான். எனவே டீ-சர்ட், ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அறவே தவிர்த்துவிடுங்கள். மிடுக்கான உடையை நேர்த்தியாக அணிந்து செல்லுங்கள்.



பேசும் விதம்:

உங்கள் குணநலனை பற்றி மேலாளருக்கு உணர்த்துவது நீங்கள் பேசும் விதம்தான். பலரும் எங்கோ பார்த்தபடி அல்லது குனிந்தபடி பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதிகாரிகள் கேள்வி கேட்கும் போதும் சரி, நீங்கள் பதில் சொல்லும் போதும் சரி, நேராக தேர்வாளரின் கண்களை பார்த்து பேசினால்தான் நீங்கள் தைரியமான திறமையான நபர் என்று அவர் அறிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளும் அவர்கள் கேட்டுகேட்டு சலிப்படைந்த வார்த்தைகளாக இல்லாமல் புதிய ஈர்ப்புடைய வார்த்தைகளாக இருந்தால் உங்களால் நிச்சயம் அவர்களை கவர முடியும்.

கேள்வி கேட்பது:

பொதுவாகவே நேர்முகத்தேர்வில் பங்கேற்பவர்களிடம் அங்குள்ள அதிகாரிகள் நீங்கள் ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்பார்கள். அதற்கு பலரும் இல்லையென்று நழுவிக் கொள்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவ்வாறாக இல்லாமல் உங்கள் மனதில் தோன்றும் நியாயமான கேள்வி, சந்தேகங்களை கேட்டால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவீர்கள். மேலும் அதிகாரிகள் உங்களை தேர்வு செய்வதற்கு இது தூண்டுதலாக அமையும்.



செல்போனை அணைப்பது:

நேர்முகத்தேர்வு அறைக்குள் செல்லும் முன் கூடுமானவரை உங்கள் செல்போனை அணைத்து வைத்து விடுவது சிறந்தது. முடியாத பட்சத்தில் அதை ஒலிஅற்ற நிலையிலாவது (சைலண்ட் மோடு) வைத்திருங்கள். இது உங்களுக்கும், அங்குள்ள பிறருக்கும் கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க உதவும். நன்மதிப்பையும் பெற்றுத் தரும்.

பொய் கூறுதல்:

ஒரு ஆய்வில் நேர்முகத்தேர்விற்கு செல்வோர் அளிக்கும் சுயவிவரங்களில் பலர் பொய்யான தகவல்களை அளிப்பதாக தெரிய வந்துள்ளது. வலைத்தளத்தில் இருந்து ஏதாவது ஒரு ரெஸ்யூமை ‘காப்பி’யடிப்பது பலரது பழக்கமாக உள்ளது. அதில் பெயர், முகவரி போன்றவற்றை மட்டும் திருத்தி பெரும்பாலானோர் தங்களது ரெஸ்யூமை தயார் செய்கின்றனர். அப்போது சில முக்கிய விவரங்களை நீக்காமலும், உயர்த்தி சொல்வதற்காக உண்மையற்ற சில விவரங்களை குறிப்பிட்டும் வைக்கிறார்கள். இப்படி தேவையற்ற தகவல்களை குறிப்பிடுவது பலரின் நேர்காணலை முடித்து வைத்திருக்கிறது.



போலியாக குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்போது மாட்டிக் கொண்டவர்கள் பலர். உதாரணமாக பாப் மியூசிக்கை ரசிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தால், அதுபற்றிய கேள்விகளுக்கும் விடையளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயமான இதிலிருந்தா கேள்வி கேட்பார்கள் என்று தேவையற்ற விவரங்களை கொடுத்துவிட்டு பதில் தெரியாமல் அவஸ்தைப்படக்கூடாது. இதுபோல சாதாரணமான விஷயங்களிலும் உண்மையான விவரங்களையே பதிவு செய்ய வேண்டும். அதுவே உங்களைப் பற்றிய நல்லெண்ணத்தை தோற்றுவிக்கும். வெற்றிக்கு வித்திடும்.

மேற்காணும் தவறுகளை பொறுப்புடன் உணர்ந்து திருத்திக் கொண்டால், நீங்கள் நேர்காணலில் ஜெயிக்கப்போவது நிஜம்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker