வெற்றி பெற திட்டமிடுங்கள் சரியான திட்டமிடலே பாதி வெற்றியைத் தந்துவிடுகிறது. எதையும் சரியாகத் திட்டமிடும்போது நாம் பாதி இலக்கினை எட்டிவிட்டோம் என்ற நிம்மதி நமக்குள்ளே பிறந்துவிடும். தேர்வுகளின்போது பாடங்களைச் சரியான திட்டமிடலோடு படிக்கத் தொடங்கினால் போதும் வெற்றிக்கனிகள் உங்கள் பக்கமே வரும்.
வாழ்க்கையும் நமக்கு பல நேரங்களில் தேர்வுகளையே ஞாபகப் படுத்தும். அதைச் சரியான முறையில் நாமும் கையாள வேண்டும் என்பதையே நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஞாபகப்படுத்தும். மிகச் சரியான முறையில் நாம் வாழ்க்கையை எதிர்கொள்வது அவசியமாகிறது. கடைசி நிமிடத் தயாரிப்புகள் சில நேரங்கள் வேண்டுமானால் நமக்கு கை கொடுக்கலாம். பல சமயங்களில் அதுவே நமக்கு மிகப்பெரிய எதிரியாக வந்து நிற்கும். நம்முடைய நிகழ் நிமிடங்களை நாம் மிகச்சிறப்பான முறையிலே அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
அடுத்தடுத்த நிமிடங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நிகழ் காலங்களை சரியான வகையில் நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். பல நேரங்களில் நாம் ரெயில்களையும் பேருந்துகளையும் தவற விட்டதின் மூலமாகவே நமது நல்ல வாய்ப்புகளை இழந்திருப்போம். அதற்கு நம்முடைய சாதாரண கவனக்குறைவே காரணமாக இருந்திருக்கும். மிகப்பெரிய சாதனைகளை சிறு சிறு கவனக்குறைவுகளின் மூலமாகவோ சரியான திட்டமிடல் இல்லாமலோ நடக்காமல் போயிருக்கும்.
உங்கள் மேல் உள்ள அதீத அன்பாலும் தாங்கள் வாழ்விலே பட்ட கஷ்டங்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் குழந்தைகள் படக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை உடையவர்கள் பெற்றோர்கள். அவர்களின் உணர்ச்சி வசப்பட்ட சில செயல்பாடுகளை நாம் தொந்தரவு என்று ஒரு போதும் கருதிடக் கூடாது.
நம்முடைய பெற்றோர்கள் நம்மை சரியான புரிதலோடு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடையவர்கள் யாரும் இங்கே தோற்றுப் போவதில்லை. அவர்களுடைய அன்பை நாம் ஒருபோதும் உதாசீனப் படுத்திட கூடாது. ஒவ்வொரு முறையும் நம்மீது அதீத அக்கறையோடு அவர்கள் சொல்வதை மனதிலே கொண்டு செயல்படும்போதே வெற்றி எளிதிலே கிடைத்து விடும் பொருளாகி விடுகிறது. நம்முடைய உயரங்களும், வளர்ச்சிகளும் நிச்சயமாக அடுத்தவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர வேண்டும். நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.