உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரம் தேவை
முதன் முதலான உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்கள் உடற்பயிற்சி சார்ந்த அடிப்படை சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
* ஜிம்முக்குச் செல்லும் முன்பு உங்களை ஒழுங்காக சுத்தம் செய்துகொள்ளுங்கள், குறிப்பாக அலவலக வேலை நேரத்திற்குப் பிறகு ஜிம்முக்குச் செல்வதாக இருந்தால் இது முக்கியம். ஜிம்முக்குச் செல்லும் முன்பு குளித்துவிட்டு, பெர்ஃப்யூம் போட்டுக்கொள்ளுங்கள், அதே சமயம் அதிகமாக போடக்கூடாது.
* உராய்வு ஏற்படும் பகுதிகளில் (உதாரணம். தொடை இடுக்குப் பகுதிகள், அக்குள்) பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்துதல் போன்ற சிறப்பு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு போட்டு நீரால் கழுவ வேண்டும். எப்போதும் ஹேன்ட் சானிட்டைசரை உடன் வைத்திருப்பது நல்லது.
* உடற்பயிற்சி செய்யும்போது வியர்க்க வேண்டும், அது அவசியம். அதற்காக, வியர்வையால் நனைந்த உபகரணங்களைப் பயன்படுத்த யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே வியர்வையைத் துடைப்பதற்காக ஒரு சுத்தமான டவலை எடுத்துச் சென்று, உடற்பயிற்சி செய்து முடித்ததும் உபகரணங்களை துடைப்பது முக்கியமாகும்.
* உங்கள் உடலில் உள்ள நீரின் அளவைப் பராமரிக்க, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு நீர் அருந்துவது மிகவும் முக்கியமாகும். பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மெட்டல் பாட்டில்களைப் பயன்படுத்துவது நல்லது. பிளாஸ்டிக் பாட்டில்களை கிருமி நீக்குவது கடினம் என்பதால், அதில் கிருமிகள் அதிகம் சேரும். மெட்டல் பாட்டில்களை சோப்பு மற்றும் கொதிக்கும் நீரைக்கொண்டு கிருமி நீக்கிவிடலாம். மேலும், நீங்கள் பார்க்காதபோது, யாரவது உங்கள் பாட்டிலில் இருந்து நீர் அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* உடற்பயிற்சி முடித்துவிட்டு வரும்போது, சோஃபாவைப் பார்த்ததும் உட்கார்ந்து ஓய்வெடுக்க மனம் ஏங்கும்! ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குளிக்கச் சென்றுவிடுங்கள், ஆனால் அதற்கு முன்பு உங்கள் உடல் குளிர்ச்சியடைய வேண்டும், அது வரை காத்திருந்து அதன் பிறகே குளிக்க வேண்டும்.
* உங்களுக்கு இருமல், தும்மல் அல்லது மூக்கு ஒழுகுதல் எதாவது இருந்தால் ஜிம்மிற்குச் செல்ல வேண்டாம். ஜிம்மிற்கு செல்லாமல் இருப்பது உங்கள் உடல் குணமடைய உதவும், மேலும் மற்றவர்கள் உங்களால் பாதிப்படைவதையும் தடுக்கும் ஏதேனும் திறந்த காயங்கள் இருந்தாலும் மேற்கூறியது பொருந்தும்.