பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாமா?
கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக, மருத்துவமனை பணி நேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.
‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.
கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி முக்க வேண்டியது இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால்,
மயக்க ஊசி போட்ட பின் மயக்கம் வருவதற்கு சிரமமாகலாம்.
மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பியிருக்காது; பிரசவத்துக்கும் தடைஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.
மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.