உங்கள் கை மட்டும் கருப்பாக இருக்கிறதா? கவலையை விடுங்கள்
பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் அளவுக்கு கை மற்றும் கழுத்துப்பகுதி, கால்களுக்கு கவனம் செலுத்துவதில்லை.
வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் முகத்தின் மேலுள்ள அக்கறை கைகளுக்கு கொடுப்பதில்லை.
உடல் பொலிவிழந்து, வயது முதிர்வதை உங்களின் கைகளை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். அதனால் கைகளை நன்கு பராமரித்தாலே முதுமைத் தோற்றத்தைத் தவிர்த்திட முடியும்.
தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சருமத்தின் தன்மை எண்ணெய்ப்பசை, வறட்சி என்று மாறிக்கொண்டேஇருக்கும். ஆனால், நம்முடைய கைகள் எல்லா கால நிலைகளிலும் வறட்சியாக இருந்தால், தட்பவெட்ப பாதிப்பையும் தாண்டி, ஆரோக்கிய குறைவு இருப்பதை உணர வேண்டும்.
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக் குறைவது, சருமப் பராமரிப்பின்மை என அதற்கான காரணங்களை அறிந்து கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு, அடிக்கடி கைகளைக் கழுவிக்கொண்டே இருப்பார்கள். அதனால்கூட கைகள் வறண்டுபோகலாம். கைகளில் வறட்சி நீண்ட காலம் நீடித்தால், சருமம் சுருங்கத் தொடங்கும். அது வயது முதிர்ந்த தோற்றத்தை உண்டாக்கும்.
வறண்ட கைகளுக்குக் கற்றாழை ஜெல் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தும்போது லோஷனாக இல்லாமல் க்ரீமாகப் பயன்படுத்துங்கள். லோஷனைவிட க்ரீம் சற்று கெட்டியாக இருக்கும் என்பதால் கைகளில் நீண்ட நேரம் நீடிக்கும். மேலும் அளவுக்கு அதிகமான வறட்சியையும் தவிர்க்க முடியும்.
அதிக நேரம் வெயிலில் இருக்க நேரும்போது, சிலருக்கு கைகளில் கரும்புள்ளிகள் உண்டாகும். இதற்கு வீட்டிலேயே இருக்கும் சிறந்த மருந்து பால். பாலை காட்டனில் நனைத்து, கைகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் துடைத்து எடுங்கள். தொடர்ந்து செய்துவர, கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.
அதேபோல் தினமும் வெளியில் செல்லும்போது, மறக்காமல் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த மறக்காதீர்கள்.