பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகள்
திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்.
மாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.
மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம்.
உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.
உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.
கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.
பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம்.
IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.
திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.
தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும்.