இனிய ஊட்டச்சத்து உணவு பால்
நாளை (ஜூன் 1-ந்தேதி) உலக பால் தினம். இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானமான பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாகும்.
இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானமான பால் ஐ.நா. சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த ஐ.நா. சபை, 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதியை உலக பால் தினமாக கடைபிடித்து வருகிறது.
பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளாகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம், லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டை சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
பால் தோல் பளபளப்பை கொடுக்கிறது. அதிகப்படியான கால்சியம் சத்தினை கொண்டு இருப்பதால் எலும்பினை வலுவாக்குகிறது. இதய நோய் சம்பந்தமான நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது.
பாலின் வேதியியல் மாற்றங்களின் மூலம் பாலில் இருந்து பல உப பொருட்களை பெறலாம். பாலை நொதிக்க செய்வதன் மூலம் கட்டிப்பட செய்து தயிரை பெறலாம். பின்னர் தயிரை கடைந்து கொழுப்புச் சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்க பொருளான நீர்த்தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயை உருக்கி நறுமணமும், சுவையும் மிக்க நெய்யை பெறலாம். பாலை நொதிக்க செய்வதன் மூலம் பாலாடை கட்டியையும் பெறலாம்.
ஒரு லிட்டர் மாட்டுப் பாலில் 30 முதல் 35 கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரத வகை கேசின் எனப்படும் உப்புகள், தாதுகள் மற்றும் வைட்டமின்கள், கால்சியம், பாஸ்டேட், மெக்னிசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் என அனைத்தும் கிடைக்கின்றன. பாலில் உப்புகள் மற்றும் தாதுகள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி12, சி, டி, கே ஆகியவையும் கலந்துள்ளன.
5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 400 மில்லி பால் சாப்பிடுவது நல்லது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது சிறந்தது என மருத்துவர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். நாளை (ஜூன் 1-ந்தேதி) உலக பால் தினம்.