அனுலோம விலோம பிராணாயாமம்
நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு அனுலோம விலோம பிராணாயாமம் மிகவும் நன்மை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பெயர் விளக்கம்: உள்மூச்சிலே காற்றை மேல் நோக்கியும் வெளிமூச்சிலே காற்றை கீழ் நோக்கியும் அலைகளைப் போல காற்றை இழுத்து விடுவதால் அனுலோம விலோம பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப் பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின் முத்திரையை செய்யவும். இரு கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளியே விட்டு நுரையீரலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றவும்.
இரு நாசிகளின் வழியாக ஒரே சீராக மூச்சுக் காற்றை ஆழமாகவும் நிதானமாகவும் உள்ளே இழுக்கவும். பிறகு அதே போல் இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை ஒரே சீராக நிதானமாகவும், ஆழமாகவும் வெளியே விடவும். இப்படிச் செய்தால் அது அனுலோம விலோம பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது.
மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும், மூச்சை வெளியே விடும் போது மார்பை சம நிலைக்கும், அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.
ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்து பயிற்சியினால் சுற்றுக்களை அதிகரித்துக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை மாலை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்:- வயிறு, மார்பு மற்றும் மூச்சின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு: மூச்சை உள்ளுக்கு இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் மூச்சுக்காற்றில் சப்தம் வராதபடி செய்யவும்.
பயன்கள்: நுரையீரல், இருதயம், வயிறு சுத்தமாக்கப்பட்டு அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்தை அடையும். ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ரத்தம் தூய்மையாகும். மூச்சின் வேகமும் இருதயத்தின் வேகமும் குறைந்து சம நிலைக்கு வரும். நுரையீரல், இருதயம் சீராக இயங்கும். நுரையீரல், சுவாசக்குழாய், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த பயிற்சி மிகவும் நன்மை அளிக்கிறது.