தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகள் நலமாக வாழ சீரான உணவுப்பழக்கம்

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்த்துவிடுவது… இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும் சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேகவைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும். குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகளை சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

குழந்தைகளின் உடல் பருமனுக்குப் பின்னால் உணவுக்கு அடுத்தபடியாக முக்கிய பங்கு விளையாட்டுக்குத்தான். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளை பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாடப் பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்துவிட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.

உடல் பருமனைக் குறைப்பதாகச் சொல்லி தாங்களே மருத்துவர்களாகிவிடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். அடுத்த வீட்டில் சொன்னார்கள், அனுபவப்பட்டவர்கள் பரிந்துரைத்தார்கள் என்று தினம் தினம் புதுப்புது எடைகுறைப்பு பயிற்சிகளில் இறங்குகிறவர்கள், நிச்சயம் வீட்டுக்கு ஒருவராவது இருக்கிறார்கள். கல்லூரி பெண்களோ ஜீரோ சைஸ் இடையழகுக்கு ஆசைப்பட்டு பட்டினி கிடக்கிறார்கள். இல்லையென்றால் சொட்டுச்சொட்டாகத் தண்ணீர் குடித்து, பருக்கை பருக்கையாக எண்ணிச் சாப்பிடுகிறார்கள். விளைவு? அனோரெக்ஸியா எனப்படும் உடல் மெலிவுப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப் பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமாக வாழலாம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker