வாதத்தை போக்கும் ஆயுர்வேதம்
வயதாகும் போது வாதம் கூடும். ஆயுர்வேத சிகிச்சை முறையால் இந்த நோயைத் தீவிரமாக்காமல் தடுக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆர்த்தரைட்டிஸ் நோய்களிலேயே அதிகம் காணப்படுவது ஓ.ஏ. என்னும் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் நோய்தான். இது உடல்உறுப்புக்கள் தேய்மானம் ஆவதால் வருவது. வயதாகும் போது, எலும்புகள் முடியும் இடங்களில் மூட்டுக்களைக் காக்கும் கார்டிலேஜ் மெலிந்து கிழிந்து போகிறது. அதனால் வலி, வீக்கம் ஆகியவற்றோடு மூட்டுக்களின் இயக்கமும் குறைகிறது.
ஓ.ஏ. எந்த மூட்டிலும் வரலாம். ஆனால் வழக்கமாக, கை முழங்கால் மூட்டுக்கள், இடுப்பு மற்று-ம் முதுகுத்தண்டில் வருகின்றது. இந்நோய் வரு-ம்போது மூட்டுக்கள் மட்டுமன்றி, பக்கத்தில் இருக்கும் தசைகள், எலும்புகள், மூட்டுக்களைச் சுற்றியுள்ள சவ்வுகள், மூட்டுக்களை மூடியிருக்கும் உறைகள் ஆகிய அனைத்தையும் பாதிக்கிறது.
பரம்பரை, அதிக வேலைப்பளு, வளர்ச்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்ற பல காரணங்களால் இந்நோய் வரலாம். ஆரோக்கியமாக இருக்கும்போது, எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று உரயாமல் நழுவிச் செல்ல, கார்டிலேஜ் உதவுகின்றது. இந்த அசைவுகளிலிருந்து தனக்குத் தேவையான சக்தியையும் கிரகித்துக் கொள்கிறது.
ஓ.ஏ. வரும்போது கார்டிலேஜின் வெளிப்புறத்திலுள்ள அடுக்கு சிதைந்து, அதனால் எலும்புகள் உராய்ந்து வலி உண்டாகிறது. சிலசமயங்களில் ஆஸ்டியோ பைட்ஸ் எனப்படும் சிறுபடிமம் எலும்பின் விளிம்பில் உண்டாகின்றன.
எலும்பிலிருந்தோ, கார்டிலேஜிலிருந்தோ உடைந்த சிறு துண்டுகள், மூட்டுக்களுக்கிடையே உள்ள வெற்றிடத்தில் மிதக்கின்றன. இதனால் மேலும் சேதம் அதிகமாகின்றது; அதிக வலி வருகின்றது; ஆர்.ஏ. போன்ற வகை ஆர்த்தரைட்டிஸ் பிற உறுப்புக்களையும் பாதிப்பது போல ஓ.ஏ. பிற உறுப்புக்களை பாதிப்பதில்லை.
அறிகுறிகள்:
நோய் தொடங்கியபின் மெதுவாகவே அதிகரிக்கும். ஆனால் போகப்போக மிகக்கடுமையாகி விடும். வலி, இறுக்கம், சப்தம் கேட்பது போன்ற உணர்வு எலும்-புகள், மூட்டுக்கள் இலகுவாக இயங்குவது குறைதல், எலும்பு உடைதல் ஆகியன நேரும். நாள்முழுதும் வேலை பார்ப்பவர்களுக்கு, வேலை முடிந்தபின், ஓ.ஏ. காரணமாக வலி அதிகமாகும். வீக்கம் வரும்; அந்த இடம் சூடாகி, பாதிக்கப்பட்ட மூட்டுக்கள் உடைய நேரலாம்.
ஓ.ஏ. தீவிரமாகும்போது, கார்டிலேஜ் முழுவதும் பாதிக்கப்பட்டு, ஓய்வாக இருக்கும்போதே வலியும், உராய்வும் வரும். ஓ.ஏ. காரணமாக உடலின் மேற்பகுதியில் எடைகூடும்; அடிக்கடி மூட்டுக்கள் உடையலாம், கால்கள் வில்போல வளையும். மேலும் ஓ.ஏ. காரணமாக நடை மாறி, நொண்டி நொண்டி நடக்க நேரும்; நோய் அதிகமாகும் போது, மருந்துகள் கூட வேலை செய்யாமல் போகும்.
முதுகுத்தண்டில்/ கழுத்தில் ஓ.ஏ. வரும்போது ஆஸ்டியோ பைட்ஸ் காரணமாக நரம்புகள் தூண்டப் பெற்று கடு-ம் வலி வரலாம். உணர்ச்சியுற்றுப் போகலாம். பூச்சி ஊருவது போன்ற உணர்வு வரும். ஓ.ஏ., விரல்களில் இருக்கும் சிறுசிறு மூட்டுக்களில் கெட்டிப்பட்ட எலும்பு வளர்ச்சியை உண்டாக்கும்; விரல்களின் முடிவில் இருக்கும் எலும்பின் வளர்ச்சி ஹெபர்டன்ஸ் நோட் எனப்படும்; விரல்களின் நடுவில் ஜாயிண்டில் வரும் எலும்பு வளர்ச்சி பவுச்சர்ஸ் நோட் எனப்படும் பாதங்களில் பெருவிரலின் அடியில் வருவது புனியன் எனப்படும்.
இவை காரணமாக, அதிக வலி இல்லாவிட்டாலும் விரல்கள் இயக்கம் பாதிக்கப்படுகிறது; கை விரல்களிலும், பாதங்களிலும் வரும் ஓ.ஏ.-க்கு பரம்பரை காரணமாக இருக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் காணப்படும்.
ஓ.ஏ.-இல் இரண்டு வகை உள்ளது. (1) பிரைமரி (முதல் நிலை) வீவீ) செகன்டரி (இரண்டாம் நிலை). முதல் நிலை/ பிரைமரி என்பது இயற்கையாக வயதாவதால் வருவது, (வேறு நோய் அல்லது காயம் காரணமாக அல்ல) வயதாகு-ம் போது கார்டிலேஜில் சேரும் நீரின் அளவு அதிகமாகும். எலும்பில் புரோட்டின் பூச்சு குறைகிறது. ஆகவே, நோய் வரும்.
செகன்டரி/இரண்டாம் நிலை
வேறு நோய்கள் காரணமாக வருவது; எடை கூடுதல் அடிக்கடி மூட்டுக்கள் உடைதல், அடிக்கடி அறுவை சிகிச்சை நடத்தல், இயற்கையிலேயே சரியான அமைப்பில் மூட்டுக்கள் இயல்பு நிலை மாறி இருத்தல், நீரிழிவு நோய் மற்றும் ஹார்மோன் மாறுதல்கள் காரணமாக வரலாம். யூரிக் அமில படிமங்கள் உருவாகி, கார்டிலேஜை பாதித்தும் ஓ.ஏ. வரலாம் கேல்சியம் பைரோபாஸ்பேட் படிமம் காரணமாக கவுட் அல்லாமல் ஆர்த்தரைட்டிஸ் வரலாம்.
ரிக்ஸ் பேக்டர் (நோய் உண்டாகக் காரணங்கள்)
1. வயதாவது
2. இன்னதென்று காரணம் அறியப்படாமலே பெண்கள் அதிகம் ஓ.ஏ. வால் பாதிக்கப்படுகின்றனர்.
3. பிறப்பிலேயே கார்டிலேஜ் குறைபாடு/ மூட்டுக்களின் அமைப்பில் குறைபாடு காரணமாக
4. விளையாடும் போது உண்டாகும் காயங்கள்/ விபத்துக்களால்
5. எடை கூடுதல்
6. சோம்பலான வாழ்க்கை முறை (அசைவின் போதே சக்தியை உறிஞ்சுகின்றன).
7. குறிப்பிட்ட மூட்டுக்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வேலைகளை மட்டும் அதிகம் பார்த்தல்
8. நீரிழிவு நோய், கவுட், தைராய்டு குறைவாக சுரத்தல், ஆகிய காரணங்களால் ஓ.ஏ. வரலாம்.
9. பரம்பரை
10. பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் சுரப்பது குறைவதால் கால்சியம் சத்து இழப்பு நேருகிறது.அதனால் ஓ.ஏ. வரும். பெண்கள் தம் உடல் நலனில் அக்கறை காட்டுவதில்லை. சரியாகச் சாப்பிடாத காரணத்தால் வரலாம், உடல் எடை கூடி விடுவதாலும் வரும்.
ஆயுர்வேத சிகிச்சை:
(இந்நோய் சந்திவாதம் எனப்படும். ஆகவே சிகிச்சை சந்திவாத சிகிச்சை எனப்படும்) வயதாகும் போது வாதம் கூடும். வாதம் இயற்கையாக உலர்ந்த இயல்பு உடையது. வாதம் மேலும் அதிகம் ஆகும்போது உராய்வைத்தடுக்கும். சினோவியல் திரவம் சுரப்பது குறையும். அதனால் கார்டிலேஜ் பாதிக்கப்படும்.
சரியாக உணவு உண்ணாதது, காயம் படல், அதிகமாகக் குளிரில் நனைதல், குளிர்ந்த உணவு எடுப்பது, இயற்கை உபாதைகளை அடக்குதல், வாயு உற்பத்தி ஆதல், தூக்கமின்மை, மன உளைச்சல், மன அழுத்தம் ஆகிய காரணங்கள் நோயை அதிகமாக்கும்.
சிகிச்சை முறையால் நோயைத் தீவிரமாக்காமல் தடுக்கலாம். பாதித்த கார்டிலேஜைச் சரி செய்யலாம். மூட்டுக்கள் இடையே உராய்வைத் தடுக்கும் திரவத்தை மேம்படுத்தலாம். அதனால் மூட்டுக்களின் செயல்பாடு மற்றும் பாரத்தை அதிகரிக்கலாம். சந்திவாத சிகிச்சையில் சமனசிகிச்சையும் சோதன சிகிச்சையும் அடங்கும்.
சமன சிகிச்சையில் மருந்து உள்ளே எடுத்துக் கொள்ளுதல், வெளிப்புறமாக மருந்து பூசுதல் ஆகியன அடங்கும். சோதனை சிகிச்சையில் பஞ்ச கர்மா, காயகல்ப சிகிச்சைகள் இடம்பெறும். அதனால் கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்படும். புத்துணர்வு கிடைக்கும். ஆரோக்கியமான உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியன மூட்டுக்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது.
மருந்துகள்:
உள்ளே சாப்பிட:
கந்த தைலம் -(வெறும் வயிற்றில் காலை, இரவு படுக்குமுன்.
தன்வந்த்ரம் கசாயம்-வெறும் வயிற்றில் (காலை, மாலை).
திக்தக நெய் – (இரவு உணவுக்குப்பின்)
ராசனாதி கஷாயம்
லராக்ஷா குக்குலு – தினமும் 1-3 கிராம், 2 முறை உணவுக்குப்பின் எடுக்கலாம். (ஆனால் அலர்ஜி, சிறுநீரகப்பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்).
வெளிப்பூச்சு:
* முறிவெண்ணெய் / தன்வந்த்ரம் தைலம் மூட்டுக்களில் தேய்க்கலாம்)
* பலா அஸ்வ கந்தாதி தைலம் லேசாகச் சூடாக்கி, தேய்த்து, 1/2 மணி கழித்து, வெந்நீரில் குளிக்கலாம்.
* 2 எண்ணெய் (நெய்+ஏதாவது ஒரு எண்ணெய்).
* 4 எண்ணெய் (நெய்+ஏதாவது ஒரு எண்ணெய் தேய்க்கலாம்).
* விளக்கெண்ணெய் அடர்த்தி அதிகம். ஆகவே உடலுக்கு நல்லது.
* எள், சதகுப்பை இரண்டையும் பாலில் வேகவைத்து வீக்கம் இருந்தால் பத்து போடலாம்.
* தசமூல சூரணம் பத்துப் போடலாம்.
* கொட்டுஞ்சுக்காதி தைலம் மெதுவாக உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வியாதிக்கு வயது முக்கிய காரணம். செரிமானம், கழிவு வெளியேற்றம் சரியாக இருக்க வேண்டும். அதற்காக
* சீரகத் தண்ணீர் குடிக்கலாம்
* சுக்குகாப்பி குடிக்கலாம்.
* உணவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிகம் சேர்க்க வேண்டும்.
* வாயு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* லிங்வசாதி சூரணம் சாப்பிடலாம் (செரிமானம் தூண்ட).
* மலச்சிக்கல் வராமலிருக்க நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உடல் தகுதிக்கேற்ப அவ்வப்போது பேதி மருந்து எடுக்கலாம்.
* உண்ணா நோன்பு அவரவர் உடல்நிலைக்குத் தகுந்தபடி மேற்கொள்ளலாம். (முழுதாகவோ அல்லது திரவ ஆகாரம் மட்டும் என்பது போன்று).
* சிறிய உடற்பயிற்சி, அவரவர் உடல் தகுதிக்கேற்ப செய்யலாம்.
* வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த பழரசங்கள், பழங்கள் ஆயுர்வேத சிகிச்சையை ஊக்குவிக்க உதவும்.
ஆர்த்தரைட்டிஸ் காரணமாக நீர்கோர்த்து, பலூன் போல உப்பும் போது, அதைத் குறைக்க உதவும் உணவுகள்:
மீன் – ஒமேகா-3, கொழுப்புச்சத்து மிகுந்த சல்மான், டுனா, ஹெரிங் போன்ற மீன்களை எடுக்கலாம். ஏனெனில் ஒமேகா-3 கொழுப்புச் சத்து ஆர்த்தரைட்டிஸ் குறையப் பெரிதும் உதவும்.
இஞ்சி-தினமும் இஞ்சியை 5 கிராம், 3 வேலை எடுப்பது செரிமானத்தை ஊக்குவித்து, ‘ஆமம்’ உருவாவதைத் தடுக்கும். மேலும் இஞ்சி, பற்பல, ஆர்ஏ போன்ற வாத நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாக உதவும்.
மஞ்சள்-மஞ்சளில் இருக்கும் குர்ருமின் என்ற பொருள் நீர்கோர்த்து, உப்புவதைத் தடுக்கும். மூட்டுக்களில் இருக்கும் வீக்கம் மற்றும் காலையில் இறுக்கமாதல் ஆகியவற்றைத் தடுக்கும்.
பூண்டு – வாதத்தைப் போக்கும் முக்கிய மருந்து. வலியைப் போக்கும், வீக்கத்தைப் போக்கும்.