நகம் கடிக்கும் பழக்கம் – விடுபட வழிகள்
கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு… என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
நகம் கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உண்டு. சிலர் நகத்தோடு சேர்த்து அதன் சதைப் பகுதியையும் கடித்துவிடுவார்கள். அப்போது அந்தப் பகுதியில் ரத்தம் வந்தால், தொற்று அபாயம் அதிகம் இருக்கும் என எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அதிக கவனத்தோடு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
இந்தப் பழக்கமுள்ளவர்களின் நகங்கள், சரியான வளர்ச்சியின்றி ஷேப்லெஸ்ஸாக இருக்கும். காரணம், தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருந்தால், அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும்.
இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்…
* ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.
* நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
* வேப்பெண்ணையைப் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான உங்கள் கவனத்தை அதிகப்படுத்தும்; அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர உதவும்.
* பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.
* கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு… என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
* பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருக்கும். ஒரே நாளில் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக விட முயற்சிப்பது வீண். நகம் கடிப்பதை ஒவ்வொரு விரலாக குறைத்துக்கொண்டு வரவும். முதலில், கட்டைவிரல் நகத்தை கடிக்காமல் இருங்கள். அதைத் தொடர்ந்து சுண்டு விரல், அடுத்து மோதிர விரல்… இப்படி முயற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
* மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகக்கூடும். பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம். நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற்றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
* உடலும் மனதும் சேர்ந்து செயல்படுவது மாதிரியான வேலைகளைச் செய்யவும். மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். எண்ணம் மற்றும் உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்ய இது உதவும்.
ஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்! என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் சரும மருத்துவரையும், மனநல மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறலாம்.