ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி
சிறுதானியங்களில் சிறப்பு மிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகள், மசாலா கலந்து செய்தால் சுவை இரட்டிப்பாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாமை – 50 கிராம்
பயத்தம் பருப்பு – 50 கிராம்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
தேங்காய் பால்- 1 கப்
கேரட், பீன்ஸ் – கால் கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
தனியா தூள் – கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
தாளிக்க :
பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு.
செய்முறை :
சாமை அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
பயத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்..
வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, பாதியளவு மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கி விடவும்.
விசில் போனவுடன் மூடியை திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி ரெடி.