சத்து நிறைந்த கேழ்வரகு கீரை குழிப்பணியாரம்
சர்க்கரை நோயாளிகள் தினமும் கீரை, கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இவை இரண்டையும் வைத்து குழிப்பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
கடுகு – ¼ டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 2,
கீரை – 1 கப்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் கீரையைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.
ஓர் அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து அத்துடன் இந்த வதக்கிய கீரை கலவையை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு (Thick batter) தோசை மாவு பதத்தில் கலக்கி 30 நிமிடம் தனியாக மூடி வைக்க வேண்டும்.
அடுப்பில் பணியாரக்கல் வைத்து சூடுபடுத்தவும். பின்பு பணியாரக்கல் குழிகளில் எண்ணெய் ஊற்றி இந்த மாவை அதில் ஊற்றி 2 நிமிடம் வேக விடவும். ஒருபக்கம் மொறுமொறுப்பாக வந்தவுடன் அதைத் திருப்பி விட்டு, 2 நிமிடம் வேக எடுத்து சூடாக இறக்கி பரிமாறவும்.