சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆசனம்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
பெயர் விளக்கம்: “தனுர்” என்றால் வில் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடலைவில் போல வளைப்பதால் தனுராசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: முதலில் தரைவிரிப்பின் மேல் குப்புறபடுக்கவும். இருகால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகளை தலைக்கு முன்னால் நீட்டி வைக்கவும். இந்த நிலைக்கு அத்வாசனம் என்று பெயர். பிறகு தலையை மேலே தூக்கி தாடையை தரை விரிப்பின் மேல் வைக்கவும். இருகால்களையும் மடக்கி வலது கைவிரல்களால் வலது கணுக்காலையும், இடதுகை விரல்களால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ளவும்.
(இந்த நிலையில் 2 முதல் 3 முறை மூச்சை ஆழமாகவும், நிதானமாகவும் இழுத்து விடவும்.
மூச்சை வெளியே விட்டு மடக்கிய கால்களை அப்படியே தூக்கவும். அப்படி தூக்கும் போது தலையிலிருந்து மார்பு வரை உள்ள உடல் பகுதியையும் மேலே தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் தரை விரிப்பின் மேல் பதிந்திருக்க வேண்டும். கண்களால் மேல் நோக்கிப் பார்க்கவும்
இந்த ஆசன நிலையில் நிதானமாக, ஆழமான மூச்சுடன் 30 முதல் 60 வினாடி நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டுபடம் 6-ல் உள்ள நிலைக்கு வந்து அதிலிருந்து அத்வாசன நிலைக்குவரவும்.
இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிறு, தொடைகள். முதுகுத் தசை மற்றும் மூச்சின் மீதும், விசுத்தி, அனாஹதம் அல்லது மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக்குறிப்பு: பொதுவாக பருமன் ஆனவர்களும், பெருந்தொந்தி உள்ளவர்களும் கால்களை மடக்கி கணுக்கால் பகுதியை கைவிரல்களால் பிடிப்பதற்கு இயலாது. அத்தகையவர்கள் மற்றொருவரின் துணைக் கொண்டு எட்டாத காலை மெதுவாக பிடித்துக் கொடுக்கச் சொல்லி சில நாட்கள் பயிலலாம்.
தடைக்குறிப்பு: உயர் இரத்த அழுத்தம், குடல் பிதுக்கம், வயிறு, குடல் புண், இருதய பலவீனம், குடல் வீக்கம், விரைவாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
பயன்கள்: சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, கல்லீரல், கணையம், அட்ரீனல் ஆகியவற்றையும் மற்றும் ஆண், பெண் பிறப்புறுப்புகளையும், பாலுணர்வு சுரப்பிகளையும் இந்த ஆசனம் சிறப்பான முறையில் செயல்பட ஊக்குவிக்கிறது. இதனால் உடலில் தோன்றும் பல விதமான நோய்கள் விரைவில் நீங்குகின்றன.