புதியவைமருத்துவம்

தாயாகிவிட்ட இளம் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

இளம் தாய்மார்கள் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்க, குழந்தையை பராமரிப்பதிலும், தன்னை பராமரிப்பதிலும் அவர்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டும்.

தாயாகிவிட்ட இளம் பெண்களுக்கு தங்கள் உடல் கட்டுக்கோப்பு பற்றிய கவலையும், தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பயமும் அதிகம் ஏற்படுகிறது. அந்த கவலையையும், பயத்தையும் வளரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கு அவர்களது குடும்பத்தினரின் உதவி மிக அவசியம். மாறாக இளம் தாய்மார்களை தனிமையில் தடுமாறவிட்டால், அவர்கள் குழப்ப சிந்தனைகளை உருவாக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவார்கள்.

இளம் தாய்மார்கள் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்க, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே செய்து முடிப்பேன் என்று அடம்பிடிக்கக்கூடாது. வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு, குழந்தையை பராமரிப்பதிலும், தன்னை பராமரிப்பதிலும் அவர்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அவர்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், அதை எல்லாம் சற்று நேரம் ஒதுக்கிவைத்துவிட்டு தியானம் செய்யவேண்டும்.

பிரசவமான ஒருசில நாட்களில் பெரும்பாலான தாய்மார்கள் ‘பேபி ப்ளூ’  என்ற மனோநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுவாக பிரசவம் முடிந்த ஒன்றரை மாதம் வரை இந்த மன அழுத்தம் நீடிக்கலாம். பின்பு மனோநிலை இயல்புக்கு திரும்பிவிடும். ஆனால் அதுவாகவே நீங்கிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், அதனை போக்கும் வழி பற்றி சிந்தித்து, அந்த அழுத்தத்தில் இருந்து தாய்மார்கள் முடிந்த அளவு சீக்கிரம் விடுபட வேண்டும்.

இதற்கான ‘மருந்தை’ குழந்தையிடமிருந்தும், கணவரிடமிருந்தும், பெற்றோரிடம் இருந்தும் தாயால் பெற முடியும். சிரித்து, விளையாடி, வருடி, அணைத்து குழந்தையிடமிருந்து அந்த மருந்தை பெறலாம். கணவரிடமும் மனம்விட்டுப்பேசி மருந்துபோல் அந்த மகிழ்ச்சியை பெறலாம். பிரசவத்தின் கடைசி மாதங்களில் வயிற்றில் குழந்தை இருப்பதை காரணங்காட்டி மனைவியை வெளியே அழைத்துச் செல்லாதவர்கள், குழந்தை பிறந்த பின்பு அந்த நிலையை படிப்படியாக மாற்ற வேண்டும்.

பாதுகாப்பான முறையில் மனைவியை வெளியே அழைத்துச்செல்ல முன்வரவேண்டும். மனைவி குழந்தையோடு கணவரும் பொழுதுபோக்கவேண்டும். மனைவிக்கு தேவையான ஓய்வு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். தாயின் பெற்றோரும் மனநிலை அறிந்து பழகி, உற்சாகப்படுத்தவேண்டும். பிரசவித்த தாய் பாசிட்டிவ்வான சிந்தனைகளை மனதில் உருவாக்கி, எப்போதும் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக்கொண்டால் இந்த மன அழுத்தத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

பிடித்த தியானத்தை செய்தால், மூளையில் நல்ல மாற்றங்கள் உருவாகும். என்டோர்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து மனதை அமைதியாக்கிவிடும். அதனால் தாய்மார்கள் ஆர்வமாக தியானம் மேற்கொள்ளவேண்டும். தினமும் எட்டுமணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களின் மனதும், உடலும் மகிழ்ச்சியாக இருந்தால்தான் குழந்தையின் வளர்ச்சியும் சிறப்பாக அமையும்.

இன்றைய வாழ்க்கைமுறை எல்லாவிதத்திலும் பெண்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்விதத்தில்தான் இருக்கிறது. அதில் சிக்கிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழும் கலையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ளவேண்டும். அது கடினமில்லை. எளிதுதான். நீங்கள் மனது வைத்தால் போதும்!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker