அருமையான காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு
தோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு எடுக்கவும்),
பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
தக்காளி – 1,
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய்,
தேங்காய் துண்டுகள் – தலா 2,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
தனியாத்தூள்,
இஞ்சி-பூண்டு விழுது – தலா 2 டீஸ்பூன்,
பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
காலிஃப்ளவரை தனித்தனியாக உதிர்த்து வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து எடுத்து தனியாக வைக்கவும்
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய், சீரகத்தை மிக்சியில் போட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
கடைசியில் தேங்காய் – சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.
சூப்பரான காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு ரெடி.