மிகச் சிறந்த உடற்பயிற்சி எது?
உடற்பயிற்சிகளின் அரசன்’ என்று அழைக்கப்படும் நடைப்பயிற்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. நடைப்பயிற்சியை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
‘உடற்பயிற்சிகளின் அரசன்’ என்று அழைக்கப்படும் நடைப்பயிற்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது 20 நிமிடங்கள்; அதிகபட்சமாக 45 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும். வாரத்துக்கு 5 நாட்களாவது நடக்க வேண்டும். அதற்குத் தேவையான உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு, உடல் வலிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எப்போது நடந்தாலும் முதல் 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும். அடுத்து நடை வேகத்தை அதிகரிக்க வேண்டும். கடைசி 5 நிமிடங்களுக்கு மீண்டும் மெதுவாக நடக்க வேண்டும். நடைப்பயிற்சியின்போது தனியாக நடப்பதைவிடத் துணையுடன் நடப்பது நல்லது. துணையுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது, பாதையில் கவனம் தவறி தடுமாறிவிடக்கூடாது என்பதும் முக்கியம்.
ஆரம்பத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். போகப்போக தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளில் 3 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். அதுபோல் ஆரம்பத்தில் ஒரு நாளில் 20 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்கத் தொடங்கி, தினமும் 5 நிமிடங்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும். நாட்கள் ஆக ஆக வேகத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம்.
நடக்கும்போது அதிகபட்சம் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 120 முறை இருக்க வேண்டும் அல்லது இப்படியும் தெரிந்துகொள்ளலாம்: துணையுடன் நடக்கும்போது, அவருக்குக் கேட்கிற அளவுக்குப் பேச முடிகிறது என்றால், அதுவே நீங்கள் அதிகபட்சம் மேற்கொள்ளக்கூடிய நடைப்பயிற்சி வேகம் என வைத்துக்கொள்ளலாம்.
நடக்கும் முன்னரும் பின்னரும் தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம். சிறிதளவு தளர்வான, நடப்பதற்கு வசதியான ஆடைகளையே அணிய வேண்டும். முக்கியமாக, கச்சிதமாகப் பொருந்தும் மார்புக் கச்சையை அணிந்துகொள்ள வேண்டும். காலுக்குப் பொருத்தமான காலணிகளையே அணிய வேண்டும்.