தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

ஆட்டிசத்தின் அறிகுறிகள்

பிறந்த குழந்தையின் வளர்ச்சியில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தாலே ஆட்டிசம் பாதிப்பு இருந்தால் எளிதில் உணரலாம்.

இன்று (ஏப்ரல் 2-ந்தேதி) உலக ஆட்டிசம் தினம்.

ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு. இதனை ஒரு நோய் என்றோ, மூளை வளர்ச்சி குறை என்றோ மற்றும் மனவளர்ச்சிக் குறை என்றோ கருதக்கூடாது.

ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்கள் ஆட்டிசம் என்பதாகும்.

தாய் கருவுற்றிருக்கும்போது ரூபெல்லா என்னும் தட்டம்மையால் பாதிக்கப்படுவது, கருவுற்ற தாய்மார்கள் மது அருந்துவது, கொகெயின் போன்ற போதை மருந்துகளை உட்கொள்ளுவது முதலியனவும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் உருவாக காரணிகளாக அமைகின்றன. எனினும் ஆட்டிசம் உருவாக முழுமையானக் காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.

பிறந்த குழந்தையின் வளர்ச்சியில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தாலே ஆட்டிசம் பாதிப்பு இருந்தால் எளிதில் உணரலாம். அப்படி இரண்டு வயதுக்குள்ளேயே குறைபாடு கண்டறியப்பட்டால் அதை பெருமளவு சரி செய்வதும் சாத்தியம். பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி இருப்பர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல், ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பர்.

பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும். தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்க வேண்டும். ஆனால், ஆறுமாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் இருப்பது, 12 மாதங்களான பின்பும் மழலை சப்தங்கள் செய்யாமலிருத்தல், 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் ஆட்டிசத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

இதுமட்டுமல்லாமல் 18 முதல் 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல் தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை, தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவாக இருத்தல், கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல், பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல், கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது, காரணமற்ற பயம் போன்றவைகளும் ஆட்டிசத்தின் அறிகுறிகளாகும்.

ஆட்டிசத்தால் பாதிப்படைந்த குழந்தைகள் பயம், ஆபத்து போன்றவற்றை உணரமாட்டார்கள். காரணமில்லாமல் அழுவதும், சோக உணர்ச்சியைக் காட்டுவதும் அவர்களின் இயல்பு. மனம் போன போக்கில் செயல்பட வேண்டும் என்று நினைப்பர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீதத் திறனுடன் இருக்க வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்கள் முழு நம்பிக்கையுடனும் கவனத்துடனும் அவர்களைக் கையாள்வதிலும், அவர்களுக்கு தேவையான சிறந்தப் பயிற்சியளிப்பதன் மூலமும் அவர்களிடமுள்ள அந்தத் திறனைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர முடியும்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த கட்டுரையில் கூறப்பட்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் ஆட்டிசம் பாதிப்பு இருக்கும் என்று உடனே முடிவெடுக்கக் கூடாது. இத்தகைய குணாதிசயம் கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் நன்றாக பரிசோதித்து மதிப்பீடு செய்த பிறகே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானதா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். குழந்தைக்குப் பிரச்சினை இருப்பதை ஒன்றரை, இரண்டு வயதிலேயே கண்டறிய முடியும்.

இந்தக் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த பயிற்சிகள் அளித்து மற்ற குழந்தைகளைப் போல் இவர்களையும் மாற்ற முடியும். ஆட்டிசத்திற்கு இதுதான் சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. இதனால் எங்கே செல்வது என்று தெரியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.

ஆரம்ப நிலையிலேயே இந்த குழந்தைகளுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம், குறைந்தது 18 வயதிலேயே அவர்கள் சுயமாக தங்கள் வேலையைச் செய்து கொள்ளும் நிலையை உருவாக்க முடியும். மற்ற குழந்தைகளைப்போல பள்ளிக்கு சென்று படிக்க முடியும். இப்படி அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

பெற்றோர்கள் கவனத்துடன் செய்ய வேண்டியது தங்கள் குழந்தைகளிடம் ஏதாவது வித்தியாசமான நடைமுறை தெரிந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் உதவியுடன் அதனைக் கண்டறிய வேண்டும். அன்புடன் அவர்களை அரவணைக்க வேண்டும். இதற்கென உள்ள தனி பயிற்சி மையங்களை கண்டறிந்து சேர்க்க வேண்டும்.

பிரச்சினைக்கு ஏற்றவாறு பேசும் பயிற்சி, பழகும் பயிற்சிகளை உரிய முறைகளில் அளிக்க வேண்டும். இப்படி, அவர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அனுபவித்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளி விவரங்கள் இங்கே இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பது வருந்தத்தக்க செய்தி. இது குறித்த விழிப்புணர்வை பெருக்க வேண்டியது இச்சமூகத்தின் கடமை.

டி.கலையரசி, சிறப்புக் கல்வி பயிற்சியாளர்Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker