இந்த காரணத்திற்காக என்னை திருமணம் செய்துக் கொள்ள யாரும் தயாராக இல்லை
நான் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும் பெண். நிறையா கலாட்டாக்கள் செய்வேன். எனக்கென தனி அணுகுமுறை, நடத்தை இருக்கிறது. அதை அனைவரும் விரும்புவதும் உண்டு. எனக்கான சுதந்திரத்தை நான் யாரிடமும் எதிர்பார்ப்பதும் இல்லை. அதை நான் என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன்.
ஒரு நல்ல நிறுவனத்தில் சொல்லும் படியான சம்பளத்தில், பொஷிஷனில் வேலை செய்து வருகிறேன். வார நாட்கள் எல்லாம் பணிபுரியும் நபர்கள், நண்பர்களுடன் என்றால், வார இறுதி நாட்கள் என் பெற்றோர் உடன் தான் இருப்பேன்.
ஆசை!
எனது துறையில் நான் பல மடங்கு உயரம் தொட வேண்டும் என்ற கொள்கைகளும், ஆசைகளும் கொண்டிருக்கிறேன். என் துறை சார்ந்து நிறைய சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் என்னுள் அதிகம் இருக்கிறது.
வாய்ப்புகள் இழந்தேன்!
சமூகத்தில் பெண்ணாக பிறந்த ஒரே காரணத்தால் என்னால் ஓரிரு முறை வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைத்தும் போய்வர இயலவில்லை. ஆன்சைட் வாய்ப்புகளுக்காக அவரவர் வழிமேல் விழிவைத்து காத்திருப்பார்கள். ஆனால், நான் வந்த வாய்ப்புகளை பெண் என்ற ஒற்றை காரணத்தால் நழுவவிட்டிருக்கிறேன்.
தப்பு தான்!
நான் என்னதான் ஒரு மெட்ரோ நகரில் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், நான் பிறந்த ஊர் என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை டேட்டிங் செல்வது மது அருந்துவது மட்டுமல்ல, திருமணமாகாத பெண் சகோதரன், அப்பாவை தவிர வேறு ஆணுடன் கூட செல்லக் கூடாது.
எல்லாமே தப்பு தான். உதவி!
அதே போல திருமணமாகிவிட்டால் பெண் கொண்டுவரும் சீதனத்துடன் சேர்த்து அவள் சம்பாதிக்கும் பணமும் கூட மணமகன் வீட்டாருக்கு என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள். ஆனால், என் பெற்றோருக்கு என்னைவிட்டால் வேறு பொருளாதார உதவி எதும் இல்லை. என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். இருந்த நிலத்தை விற்று தான் நான் மேற்படிப்பு பயின்றேன். ஆகவே, அவர்கள் இறக்கும் வரையில் என்னுடைய உதவி நிச்சயம் வேண்டும்.
கூடாது!
எனக்கு காதல் திருமணத்தில் உடன்பாடு எல்லை என்றெல்லாம் இல்லை. ஆனால், என்னை கடினமான சூழல்கள் கடந்து வந்து ஆளாக்கிய பெற்றோருக்கு பிடிக்காது என்ற ஒரே காரணத்தால் நிச்சயத்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவர்கள் பார்க்கும் வரன்கள் எல்லாமே எனக்கு சாபமாகவே அமைகிறது. நான் அவர்கள் முன் வைக்கும் ஒரே வேண்டுகோள் ஒன்று தான். திருமணத்திற்கு பிறகு என் ஊதியத்தை தரமாட்டேன். என் அப்பா – அம்மாவுக்கு என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. ஆனால், இந்த சிறிய வேண்டுகோளுக்கு யாருமே செவி சாய்ப்பதில்லை.
நோ!
இதுவரை 15க்கும் மேற்பட்டவர்கள் பெண்பார்க்க வந்து சென்றுவிட்டனர். அனைவரிடமும் இந்த ஒரே ஒரு கோரிக்கை தான் முன்வைத்தேன். ஆனால், யாரும் இதற்கு செவி சாய்ப்பதாக இல்லை. ஓரிரு வரன் மட்டும் வேண்டுமென்றால் ஓரிரு இலட்ச ரூபாய் கொடுத்துவிடலாம். அதன் பிறகு எதுவும் வேண்டாம் என்றும் கூறினார்கள்.
கொடுமை!
இதில், ஒரு வரன் வீட்டார் என் பெற்றோரை வேண்டுமானால் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாமா என்று கேட்டான். வந்ததே கோபம்… அங்கேயே மூடிட்டு வீட்டைவிட்டு வெளிய போ என்று விரட்டிவிட்டேன். இதே அவன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் என்று நான் கூறினால் அவன் ஏற்றுக் கொள்வானா? பெண் என்றால் மட்டும் அவ்வளவு மட்டமா?
நாணயம்!
மனிதர்கள் நாணயமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஆனால், நம் சமூகத்தில் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் தான் மதிக்கிறார்கள். அது ஆண்கள் பக்கம். நாணயத்தின் மறுபக்கத்திற்கு இங்கே மதிப்பு கிடையாது. பெண்கள் என்றால் எல்லா விஷயங்களிலும் மட்டம் தான். என்ன மாற்றம்? பெண்கள் முன்னேற்றம் கண்டுவிட்டனர், ஆண்களை காட்டிலும் உயர்ந்துவிட்டனர் என்று வெறுமென விவாத பேச்சுக்களுக்கு மட்டுமே குறிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.
இங்கே பெண்களுக்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை. இதே, நான் திருமணத்திற்கு பிறகு என் கணவரை அவர் பெற்றோருக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறினால் யாரவது ஏற்பார்களா? என்னை கொடுமைக்கார மருமகள் என்று திட்டிதீர்க்குமே இந்த சமூகம். நீ வாயேன்… ஏன் திருமணத்திற்கு பிறகு பெண் தான் ஆண் வீட்டுக்கு செல்ல வேண்டுமா? இனிமேல் நீங்கள் வாருங்களேன்.
பெண்கள் ஆண்களுக்கு சலைத்தவர்களல்ல. உங்களுக்கு நிகராக நாங்களும் வளர்ந்து வருகிறோம். ஆனால், திருமணம், காதல், கற்பு என சில கோட்பாடுகள் வரைந்து வைத்து எப்படியாவது பெண்களை கட்டம் கட்டி கூண்டுக்குள் அடைத்துவிடுகிறார்கள். இதில், படித்தவள், படிக்காதவள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை.
போதுமடா சாமி!
என் அப்பா – அம்மாவிற்கு இப்போதே வருத்தம் அதிகரித்து வருகிறது. அவர்களது கடைசி ஆசை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். என் குழந்தையை அவர்கள் கையில் ஏந்திக் கொஞ்ச வேண்டும் என்பது தான். அவர்கள் மனம் நோகும் என்ற ஒரே காரணத்திற்காக தான் காதலையும் தவிர்த்தேன்.
என் வரன் தேடும் படலத்தில் நான் கண்டறிந்த ஒரே விஷயம். நம் சமூகம் இன்னும் மாறவில்லை. எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் நமது சமூகத்தில் நூறு சதவித மாற்றத்தையும், அறிவையும் புகட்டவில்லை. இன்னும் நாம் பல விஷயங்களில் கற்காலத்தையே கட்டிக் கொண்டு தான் அழுதுக் கொண்டிருக்கிறோம்.