ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

இரண்டாவது குழந்தை: குழப்பமும்.. குதூகலமும்..

இரண்டு குழந்தைகள் தேவை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால் இரண்டாவது முறையாக தாய்மையடையும்போது, எல்லா குடும்பங்களிலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகி விடுகிறது. ஆனால் இரண்டாவது குழந்தையின் வரவு, முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாது. இரண்டாவது குழந்தையின் வரவால், புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் நிச்சயம் ஏங்கிப்போவார்கள்.

இரண்டாவது குழந்தைக்கு முன்னுரிமை கிடைப்பதை கவனிக்கும் மூத்த குழந்தை, மனதளவில் மிகவும் பாதிக்கப்படும். சில குழந்தைகள் சோர்வாகவும், இன்னும் சிலர் கோபமாகவும் மாறிப்போக வாய்ப்புள்ளது. கத்துவது, அழுவது, சேட்டை செய்வது என அவர்கள் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். இது மற்றவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியாகும்.

சில குழந்தைகள் உடல் வளர்ச்சியில் பின்தங்கிப்போகும் சூழ்நிலை உருவாகும். டம்ளரில் பால் குடித்துப் பழகிய அவர்கள், சிறு குழந்தையாக இருந்தால்தான் கவனிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் புட்டிப்பால் குடிக்கும் பழக்கத்திற்கு மாறுவார்கள். இதுபோல பேச்சிலும், நடவடிக்கையிலும் சில பின்னடைவுகளை வேண்டுமென்றே முதல் குழந்தை உருவாக்கலாம்.

இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் முதல் குழந்தை ‘எதையும் தாங்கும் பக்குவத்திற்கு வந்துவிட்டது’ என்று தவறாக கணிக்கிறார்கள். இரண்டாவது குழந்தை பிறந்துவிட்டாலும், முதலில் பிறந்ததும் அதுபோன்றதொரு குழந்தைதான் என்பதை பெற்றோர் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

‘உன் மீதும் முன்புபோல் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதை இந்த தருணத்தில் முதல் குழந்தைக்கு புரிய வைக்கும் விதமாக பெற்றோர் செயல்பட வேண்டும். அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதிருந்தே, அதற்கு முதல் குழந்தையை தயார்படுத்த வேண்டும்.

தாயின் வயிறு பெரிதாகிக் கொண்டே வருவதுகூட முதல் குழந்தைக்கு வித்தியாசமாகத் தெரியும். தாயின் மேடான வயிற்றைத் தொட்டுப் பார்க்கவும், வயிற்றில் தட்டவும் அதற்குத் தோன்றலாம். அப்போதே முதல் குழந்தைக்கு உண்மையை புரியவைத்து, பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தை பற்றிய அடிப்படை விஷயங்களை தெளிவுபடுத்தி, தன் சகோதரனை (அல்லது சகோதரியை) வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் தன் உடன்பிறப்பை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். இப்படி கர்ப்பத்திலிருந்தே மூத்த குழந்தையை சகோதர பாசத்திற்குப் பழக்கினால், அது இயல்பாகிவிடும்.

பிறக்கப் போகும் பாப்பா உன்னுடன் விளையாட ஓடி வரும். நீ சொன்னதையெல்லாம் கேட்கும், நீதான் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த நண்பர்களாக இருக்க வேண்டும், என்றெல்லாம் கூறி முதல் குழந்தையிடம் ஆவலைத்தூண்ட வேண்டும்.

இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே முதல் குழந்தையிடம் முன்பு போல் அக்கறை காட்ட முடியாமல் போக வாய்ப்புகள் அதிகம் என்பதால், கர்ப்பகாலத்திலே முதல் குழந்தைக்கு ஏக்கம் ஏற்படாத அளவுக்கு பாசத்தை புரியவைக்கவேண்டும்.

இரண்டாவது குழந்தைக்கு பொருட்கள் ஏதாவது வாங்கச்சென்றால், மூத்த குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். பாப்பாவுக்கு எந்த உடையை தேர்வு செய்யலாம், எந்த பொம்மையை வாங்கலாம் என்று ஆலோசனை கேளுங்கள். பாப்பாவுக்கு இது நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறும் கருத்து களுக்கு முன்னுரிமை தாருங்கள். அதையே தேர்வு செய்து இரண்டாவது குழந்தைக்கு கொடுங்கள். அது இரு குழந்தைகளையுமே மகிழ்ச்சிப்படுத்தும்.

பாப்பாவை நானும் தூக்கிவைத்துக்கொள்கிறேன் என்று மூத்த குழந்தை கேட்டால், அவர்களின் மடியில் பாதுகாப்பாக உட்காரவைக்க அனுமதியுங்கள். உன்னால் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி, புறக்கணிக்காதீர்கள். அந்தக் குழந்தையை கவனிக்க முதல் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker