அழகு..அழகு..புதியவை

அழகு பராமரிப்பில் செய்யும் தவறுகளும்.. தீர்வுகளும்..

பெண்கள் எந்தவொரு சூழலிலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுவதில்லை. சிலவேளைகளில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக தவறான அணுகுமுறைகளையும் கையாண்டுவிடுகிறார்கள். அது ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சருமத்தையும் பாழ்படுத்திவிடும். பெண்கள் ஒப்பனை விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

குளிர்காலத்தில் சன்ஸ் கிரீமை தவிர்க்கலாம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அது தவறானது. எல்லா பருவகாலத்திற்கும் சன்ஸ்கிரீம் அவசியம். குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் சருமத்தை நேரடியாக தாக்காது என்றாலும் புற ஊதா கதிர்வீச்சின் வீரியம் குறையாமலேயே இருக்கும். அது சருமத்துக்குள் ஆழமாக ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்திவிடும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீமை தவிர்த்து வந்தால் விரைவிலேயே வயதான தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

ஒப்பனையுடன் எப்போதாவது தூங்குவது தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒப்பனையை அப்புறப்படுத்தாமல் தூங்கும்போது அவை சரும துளைகளை அடைத்துவிடும். சரும தசைகளையும் பலவீனமாக்கி விடும். கருவளையம் போன்ற பாதிப்பும் உருவாகும். ஒப்பனை செய்யாவிட்டாலும் கூட வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தை கழுவ வேண்டியது அவசியம். அது சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கை போக்கி புத்துணர்வை ஏற்படுத்தும்.

சருமம் பளபளப்பாக மிளிருவதற்காக தினமும் அழுத்தமாக தேய்த்து மசாஜ் செய்வதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது இறந்த செல்களை நீக்குவதற்கு சிறந்த வழிமுறையாகும். ஆனாலும் தினமும் அப்படி செய்வது நல்லதல்ல. அதிகபடியான அழுத்தம் சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வறட்சி, நீரிழப்பு, சருமம் சிவப்பாக மாறுதல், சருமம் இறுகுதல், சரும அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். வாரத்திற்கு இருமுறை அழுத்தி தேய்த்து அழுவது போதுமானது. அது சருமத்தின் மேற்பரப்பு மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வழிவகை செய்யும்.

சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம். அது சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் லோஷனை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அது தவறானது. முகத்தின் மென்மை தன்மைக்கு ஏற்ற லோஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உடலுக்கு பயன்படுத்தும் லோஷன் அடர்த்தியான தன்மை கொண்டது. அது சருமத்திற்கு எரிச்சல் தரும்.

முகத்தில் பரு தோன்றினால் பலரும் அதனை கைகளால் அழுத்தி அப்புறப்படுத்திவிடுவார்கள். அது சரும அழகை சிதைத்துவிடும். அப்படி செய்வது சருமத்தில் மேலும் பருக்கள் தோன்ற வழிவகுப்பதோடு இயற்கையாகவே குணப்படுத்தும் சரும கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker