ஆரோக்கியம்புதியவை

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் ஆயுள் கூடும்

நார்வேயில், 5,700 வயோதிக ஆண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று மணிநேர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்யாத வயோதிகர்களைவிட, ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

வயதோரிகர்களது ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துமாறு, பிரிட்டிஷ் ஜேர்ணல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையில், ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் கூடியதொரு அழைப்பு விடுத்துள்ளனர்.

வயோதிகர்கள் மத்தியில் குறைந்துவரும் உடற்பயிற்சி குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்ததை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நார்வேயின், ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலை மேற்கொண்ட ஆய்வில், மிதமான உடற்பயிற்சி, மற்றும் தீவிர உடற்பயிற்சி, ஆகிய இரண்டுமே ஒருவரின் ஆயட்காலத்தை நீடிப்பதாக தெரிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிகர்கள், வாரத்திக் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என, பிரித்தானியாவில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

68 தொடக்கம் 77 வயதிற்குட்பட்டவர்கள், வாரம் ஒன்றிற்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், எந்த பலனும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பதினொரு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஏதாவது ஒருவகை உடற்பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடம் வாரத்துக்கு ஆறுமுறை செய்யும்போது, அப்படி செய்பவர் மரணமடையும் வீதம் 40 விழுக்காடு குறைவதாக தெரிவிக்கப்படுகிறது.

புகைப்பிடித்தலை நிறுத்துவதால் உயிரிழப்புக்கள் குறைவடைவதைப் போல, உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் நன்மை ஏற்படுகிறது என்பதுடன், உடற்பயிற்சியை அதிகரிப்பதுடன், புகை பிடிக்கும் பழக்கவழக்கத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, ஆண் வயோதிகர்களுக்கான பொது சுகாதார உக்திகள் தெரிவிக்கின.

வயோதிகர்களை ஆராய்ச்சிக்குட்படுத்திய இந்த ஆய்வு, அவர்கள் முன்னர் தமது வாழ்க்கையில் எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மக்கள் மிகவும் குறைவான அளவு உடற்பயிற்சியை மேற்கொள்வதாக, பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பின்புலத்தில் இந்த ஆய்வும் வெளிவந்துள்ளது.

எந்தெந்த நாடுகளில் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்வதில்லை என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர்ச்சுக்கலில் 69 வீதமானோரும், போலாந்தில் 55 வீதமானோரும், பிரான்ஸில் 46 வீதமானோரும், பிரித்தானியாவில் 44 வீதமானோரும், குரோஷியாவில் 34 வீதமானோரும், ஜேர்மனியில் 26, வீதமானோரும் நெதர்லாந்தில் 14 வீதமானோரும் மிதமான உடற்பயிற்சியைக் கூட செய்யாமல் இருக்கிறார்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

வயது பேதமின்றி, தொடர்ச்சியாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது, இதய சுகாதாரத்திற்கு நல்லது என்பதுடன், ஆயுளையும் நீடிக்கச் செய்யும் என தொண்டு நிறுவனத்தின் சார்பாக பேசிய ஜூலி வாட் தெரிவித்தார். தமது புதிய புள்ளிவிவரத் தரவுகளின் படி, பிரித்தானியாவின் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் வரை, மிதமான உடற்பயிற்சியைக்கூட செய்வதில்லை என்றும், மற்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் அதிகமான அளவு என்றும் அவர் கூறினார்.

உடற்பயிற்சியும் அதனூடாக பேணப்படும் ஆரோக்கியமான வாழ்வும் ஆயுளைக் கூட்டும் என்பதே இந்த இரண்டு ஆய்வுகளின் ஒருமித்த முடிவாக வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker