எடிட்டர் சாய்ஸ்புதியவை

வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளத்தால் பாதிக்கப்படும் பெண்கள்

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றிமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச கட்ட வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும். மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரியதாக கருதிய சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். வாழ்க்கையின் அங்கமாகவே சமூகவலைதளம் மாறிவிட்டது எனலாம்.



நன்மைகள்

சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கி கொண்டிருக்கிறது. கருத்துகளை பரிமாறி கொள்ளவும், மக்களை ஒன்றிணைக்கவும் தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. தன் குடும்பத்தை பிரிந்து சென்று மறந்து விடாது அயல்நாடுகளில்வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். வணிக நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலை தளங்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

தீமைகள்

சமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அது மட்டுமின்றி சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.



அதிக பயன்பாட்டின் விளைவு

24 மணி நேரமும் சமூக வலை தளங்களையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்களை குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker